காணாமல் போனதாக கூறப்பட்ட வட கொரிய அதிபரின் மனைவி பொது நிகழ்வில் பங்கேற்றார் - News View

About Us

About Us

Breaking

Thursday, February 18, 2021

காணாமல் போனதாக கூறப்பட்ட வட கொரிய அதிபரின் மனைவி பொது நிகழ்வில் பங்கேற்றார்

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் மனைவி ரி சோல் ஜூ, கடந்த செவ்வாயன்று (16) கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து பொது நிகழ்ச்சியில் மக்கள் முன் தோன்றினார். 

மறைந்த தலைவர் கிம் ஜாங் இல் பிறந்தநாள் நினைவு நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை இரவு தனது கணவருடன் இவர் கலந்து கொண்டார். 

கிம்மின் மறைந்த தந்தையும் முன்னாள் தலைவருமான கிம் ஜாங் இல் பிறந்தநாளைக் குறிக்கும் நிகழ்வில் அதிகாரப்பூர்வ ஆளும் தொழிலாளர் கட்சியின் செய்தித்தாள் ரோடாங் சின்முன் இந்த ஜோடியின் புகைப்படங்களை வெளியிட்டது. 

ரி பெரும்பாலும் கிம் உடன் முக்கிய பொது நிகழ்வுகளுக்கு செல்வது வழக்கம். அவர் கடைசியாக ஜனவரி 25, 2020 அன்று, பியோங்யாங்கில் ஒரு தியேட்டரில் நடந்த சந்திர புத்தாண்டு கொண்டாட்டத்தில் கணவருடன் கலந்து கொண்டார். பின்னர் அவர் காணாமல் போனதாக பல செய்திகளும் சதி கோட்பாடுகளும் பரவின. 

ஒருவேளை கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் அபாயத்தைத் தவிர்ப்பதற்காக அவர் தனிமையில் இருந்திருக்கலாம் அல்லது அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற வதந்திகளும் அதிகம் பரவத் தொடங்கின. 

கிம் ஜாங் உன் மற்றும் ரி சோல் ஜூ தம்பதியருக்கு இதுவரை மூன்று குழந்தைகள் இருப்பதாக நம்பப்படுகிறது. பல்வேறு கொரிய அதிகாரிகள் கொடுத்த அறிக்கைகளின்படி, ரி மக்களின் பார்வையில் இருந்து விலகி இருப்பதற்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.

இது குறித்து, கொரியா இன்ஸ்டிடியூட் ஃபார் நேஷனல் யூனிஃபிகேஷனில் வட கொரிய ஆராய்ச்சி பிரிவின் இயக்குனர் ஹாங் மின் கூறுகையில், "அவர் காணாமல் போனதற்கு கொரோனா வைரஸ் தொற்று நோய் ஒரு காரணமாக இருக்கலாம். சிறு குழந்தைகளுடன் ஒரு தாயாக, பொது நடவடிக்கைகளில் பங்கேற்பது தொற்று நோயை ஏற்படுத்தும். கடந்த ஆண்டு கிம் ஜாங் உன் வெளியே வராததற்கு காரணமும் இதுதான். கடந்த ஆண்டில் அவர் மிகக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பொது நிகழ்வில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது" எனத் தெரிவித்துள்ளார். 

இந்த வாரம், ஒரு தென் கொரிய உளவுத்துறை அளித்த தகவலின்படி, அதிபரின் மனைவி பாதுகாப்பாக இருப்பதற்கும், தனது குழந்தைகளுடன் ஒரு நல்ல நேரத்தை செலவிடுவதற்கும் வாய்ப்புள்ளது என்று கூறியிருந்தது.

ரி தனது இளம் மகள் ஜு ஏவை கவனித்துக் கொள்வதில் மும்முரமாக இருப்பதாக சில அதிகாரிகள் கருதுகின்றனர். இது தவிர கடந்த ஒரு வருடமாக ரி சோல் ஜூ காணாமல் போனதற்கு வேறு சில வதந்திகளும் வெளியாகியிருந்தன. 

அதாவது, ரி ஒரு வருடமாக வெளியே வராததற்கு கிம் ஜாங் உன்னின் நோய் வாய்ப்பட்ட அத்தை கிம் கியுங் ஹீ ஒரு காரணமாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. தனது அத்தையை கவனித்து கொள்வதில் அவர் பிசியாக இருந்ததாக செய்திகள் வெளியாகின. 

இதனை தொடர்ந்து ரி சில தீவிர உடல் நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டிருக்கலாம் என்று சில கோட்பாடுகள் வெளிவந்துள்ளன. இதன் காரணமாகவே அவர் நீண்ட காலமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.

ரீயின் இரக்கமற்ற கணவரால் அவர் காணாமல் போனதாகக் மற்றொரு பயங்கரமான ஒரு வதந்தியும் பரவியது குறிப்பிடத்தக்கது. 

ஆனால் கணவரும் அதிபருமான கிம் ஜாங் உன்னின் உத்தரவு இல்லாமல் ரி தனது வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. 

ரி கடந்த 2009ஆம் ஆண்டு கிம் ஜான் உன்னை மணந்து கொண்டார். முன்னாள் நட்சத்திர பாடகியான இவருக்கு வயது 30 ஐ தாண்டியிருக்கும் என நம்பப்படுகிறது. 

மாநில ஊடகங்களில் "காம்ரேட்" என அழைக்கப்பட்ட இவர், ஏப்ரல் 2018ஆம் ஆண்டு முதல் "மரியாதைக்குரிய முதல் பெண்மணி" என அழைக்கப்பட்டார். 

தனிமைப்படுத்தப்பட்ட, கௌரவிக்கப்பட வேண்டிய பெண்களில் ஒருவராக அவர் தற்போது கருதப்படுகிறார். 

ஆணாதிக்க தேசத்தில், அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு நெருங்கிய ஆலோசகராக அவரது சகோதரி கிம் யோ ஜாங்க் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment