சுதந்திர நாளில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் தவறானது - இனப் பிரச்சினை என்பதொன்று கிடையாது : எஸ்.பி. திஸாநாயக்க - News View

About Us

About Us

Breaking

Thursday, February 4, 2021

சுதந்திர நாளில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் தவறானது - இனப் பிரச்சினை என்பதொன்று கிடையாது : எஸ்.பி. திஸாநாயக்க

(இராஜதுரை ஹஷான்)

சுதந்திர நாளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் தவறான செயற்பாடாகும். தமிழ் அரசியல்வாதிகள் இல்லாத பிரச்சினைக்கு முன்னுரிமை கொடுத்து அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள். தெற்கில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி பணிகள் வடக்கிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் சுதந்திர தினத்தன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் முன்னெடுத்த போராட்டங்கள் தவாறன செயற்பாடாகும்.

பிரித்தானிய காலணித்துவ ஆட்சியில் இருந்து இலங்கை விடுதலை பெறுவதற்கு தமிழ் - முஸ்லிம் தலைவர்கள் முன்னின்று செயற்பட்டார்கள். ஆகவே இலங்கை பிரஜைகள் அனைவரும் இனம், மதம் மற்றும் மொழி பேதமின்றி சுதந்திரத்தை கொண்டாட வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகள் இல்லாத பிரச்சினைகளை இருப்பதாக குறிப்பிட்டுக் கொள்கிறார்கள். 

தெற்கில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அரச சேவையில் திறமைக்கேற்ப முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளன.

30 வருட கால யுத்தம் முழு நாட்டுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது. யுத்தம் முடிவடைந்த பிறகு குறுகிய காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்பட்டன.

சர்வதே அரங்கில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் தொடர்பில் தமிழ் அரசியல்வாதிகள் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளார்கள்.

இனப் பிரச்சினை என்பதொன்று கிடையாது. அரசியல்வாதிகளே இனப் பிரச்சினை என்ற விம்பத்தை தோற்றுவித்து அதில் அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு அரசியல் ரீதியிலான உரிமை மாகாண சபை தேர்தல் ஊடாக வழங்கப்பட்டன. அதனையும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும், தமிழ் அரசியல்வாதிகளும் கடந்த அரசாங்கத்தில் பாதுகாத்துக் கொள்ளவில்லை.

பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் தங்களுக்கு தேவையான பிரதிநிதிகளை தெரிவு செய்து கொள்வார்கள். இனப் பிரச்சினைக்கு தீர்வு அவசியம் என்று குறிப்பிடுவதால் எவ்வித பயனும் ஏற்படாது என்றார்.

No comments:

Post a Comment