(செ.தேன்மொழி)
பஸ்ஸில் பயணித்த பெண்கள் இருவருக்கு, மயக்க மருந்தடங்கிய உணவை வழங்கி அவர்களுடைய தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற நபரை கைது செய்வதற்காக சாலியவௌ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, அனுராதபுரத்திலிருந்து - கொழும்பு நோக்கிச் சென்ற பஸ் ஒன்றில் பயணித்த பெண்கள் இருவருக்கு நபரொருவர் மயக்க மருந்து அடங்கிய உணவு பொருள் ஒன்றை வழங்கி, அவர்களை மயக்கமடையச் செய்து, அவர்களுடைய தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக சாலியவெவ பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர் பஸ்ஸில் பயணித்த பெண்கள் இருவரிடமும் சினேகத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளதுடன், பின்னர் அவர்களுக்கு தன்னிடமிருந்த உணவு பொருள் ஒன்றை வழங்கியுள்ளார்.
அதனை உண்ட பெண்கள் இருவரும் மயக்கமடைந்துள்ளதுடன், பின்னரே அவர் இவ்வாறு கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளார். சந்தேக நபரினால் கொள்ளையிடப்பட்ட பணம் மற்றும் தங்க நகைகளின் பெறுமதி 2 இலட்சம் ரூபாய் என்று தெரியவந்துள்ளது.
பெண்கள் இருவரும் இரு தினங்கள் இவ்வாறு மயக்கமுற்ற நிலையில் இருந்துள்ளதுடன், இதனால் அவர்களிடமிருந்து வாக்குமூலங்களை பெற்றுக் கொள்வதிலும் சிக்கல் ஏற்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் தற்போது சந்தேக நபரை கைது செய்வதற்காக சாலியவெவ பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment