(எம்.எப்.எம்.பஸீர்)
நிதி முறைகேடுகள் தொடர்பில் ஈ.ரீ.ஐ. மற்றும் சுவர்ணமஹால் நிறுவனத்தின் பணிப்பாளர்களாக செயற்பட்ட மூவர் இன்று (5) இரவு சி.ஐ.டி.யின் சிறப்புக் குழுவினரால் கைது செய்யப்பட்டனர்.
சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா, இன்று பிற்பகல் பொலிஸ்மா அதிபருக்கும், மாலை வேளை சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கும் வழங்கிய விஷேட ஆலோசனைகளுக்கு அமைய இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈ.ரீ.ஐ. மற்றும் சுவர்ணமஹால் நிறுவனத்தின் பணிப்பாளர்களாக செயற்பட்ட ஜீவக எதிரிசிங்க, அஞ்சலி தீபா எதிரிசிங்க, அசங்க எதிரிசிங்க ஆகிய மூவருமே இவ்வாறு சி.ஐ.டி.யினரால் இன்று மாலை கைது செய்யப்ப்ட்டிருந்த நிலையில் மற்றொரு பணிப்பாளரான நாலக எதிரிசிங்கவையும் கைது செய்ய விசாரணைகளும் நடவடிக்கைகளும் சி.ஐ.டி.யின் சிறப்புக் குழுவினரால் இன்று இரவாகும் போது முன்னெடுக்கப்பட்டிருந்தன.
ஈ.ரீ.ஐ. மற்றும் சுவர்ணமஹால் நிறுவனத்தின் பணிப்பாளர்களுக்கு எதிராக குற்றவியல் விசாரணைகளை முன்னெடுக்குமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பொலிஸ்மா அதிபருக்கு இன்று பிற்பகல் ஆலோசனை வழங்கியிருந்தார்.
13.7 மில்லியன் பணத்தை சட்டவிரோதமாக பெற்றுக் கொண்டமை உள்ளிட்ட நிதி முறைகேடு தொடர்பிலேயே இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சட்டமா அதிபரின் செய்தித் தொடர்பாளர், அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன கேசரியிடம் தெரிவித்தார்.
ஈ.ரி.ஐ. விவகாரம் தொடர்பில் விசாரித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு இணங்க இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன மேலும் குறிப்பிட்டார்.
அத்துடன், அனுமதியற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டமை தொடர்பில் சுவர்ணமஹால் நகையகத்தின் பணிப்பாளருக்கு எதிராக சட்டமா அதிபரினால் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
ஈ.ரி.ஐ. நிதி நிறுவனம் 6,480 பில்லியன் வைப்பு பணத்துடன் இரகசிய கணக்குகளை சட்டவிரோதமாக பேணியுள்ளதுடன், சுவர்ணமஹால் நகையகம் மத்திய வங்கியின் ஒப்புதல் மற்றும் பதிவின்றி 7.2 பில்லியன் பண வைப்புகளை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கமைய, ஈ.ரீ.ஐ. நிதி நிறுவனம் மற்றும் சுவர்ணமஹால் நகையகத்தின் பணிப்பாளர்களாக செயற்பட்ட ஈ.ரி.ஐ. நிதி நிறுவனத்தின் தலைவர் காலஞ்சென்ற சோமா எதிரிசிங்க, ஜீவக ஹேமால் எதிரிசிங்க, நாலக எதிரிசிங்க, அஞ்சலி தீபா எதிரிசிங்க மற்றும் அசங்க ஶ்ரீமால் எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளதாக அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன குறிப்பிட்டார்.
இந்நிலையில், இன்று மாலை சி.ஐ.டி.யினருக்கு விஷேட ஆலோசனைகளை வழங்கிய சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, சுவர்ணமஹால் நிறுவன பணிப்பாளர்களை உடனடியாக கைது செய்யுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்நிலையிலேயே சி.ஐ.டி. பிரதானி பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின்வின் உத்தரவில், அதன் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த டி சொய்ஸாவின் ஆலோசனைக்கு அமைய, சிறப்புக் குழுவினர், இன்று இரவு 8.00 மணியளவில் 3 பணிப்பாளர்களைக் கைது செய்திருந்தனர். மற்றொருவரை கைது செய்ய தொடர் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment