அனுமதிகளையும் தாண்டி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும் - அங்கஜன் எம்.பி கண்டனம் - News View

Breaking

Post Top Ad

Sunday, January 10, 2021

அனுமதிகளையும் தாண்டி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும் - அங்கஜன் எம்.பி கண்டனம்

அனுமதிகளையும் தாண்டி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைப்புச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களுக்கு வழங்கிய கண்டன அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். 

அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில் நான் மக்களின் பிரதிநிதியே தவிர அரசின் பிரதிநிதி அல்ல. மக்களுக்கு ஓர் பிரச்சனை என்றால் எனது பதவியைக் கூட ராஜினாமா செய்வேன் என கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் யாழ் பல்கலைக்கழகத்தில் வைத்து கூறியிருந்தேன். அந்த வகையில் தமிழ் மக்களின் அடையாளச் சின்னம் ஒன்று தகர்க்கப்பட்டிருக்கும் இவ்விடயத்தில் என்னால் கரிசனை காட்டாமல் இருந்து விட முடியாது.

ஓர் சமூகத்தின் நினைவுச் சுவடுகளை அழிப்பதன் மூலம் அவ் மக்கள் மனங்களில் உள்ள வடுக்களை அழித்துவிட முடியாது. ஒருவரின் அல்லது ஒரு சமூகத்தின் நினைவாக அமைக்கப்படும் நினைவுத் தூபியை உடைப்பதென்பது ஒட்டு மொத்த சமூகத்திற்கும் அது பேரிழப்பாக அமையும். அந்த வகையில் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்திருந்த முள்ளி வாய்க்கால் நினைவுத் தூபி அழிப்புச் சம்பவமும் தமிழ் மக்கள் மனங்களில் ஓர் வடுவாக மாறிவிட்டது. 

எந்தவொரு செயற்பாட்டிற்கும் அனுமதி முக்கியம். கடந்த கால அரசியல் தலைமைகள் அன்றே நினைவுத் தூபிக்கான உரிய அனுமதியைப் பெற்றுக் கொடுத்திருக்க முடியும். அன்று விட்ட தவறு மற்றும் அசண்டையீனம்தான் இன்று ஓர் அடையாளச் சின்னம் அழிக்கப்பட காரணமாக அமைந்துவிட்டது. 

இந்த நினைவுச் சின்னம் தனி ஒரு மதத்திற்கோ அல்லது இனத்திற்கோ சொந்தமானது அல்ல. இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த பொதுமக்கள், போர் வீரர்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்றே இந்த நினைவுத் தூபி. இந்த உண்மையை சிங்கள மாணவர்களுக்கு எடுத்துரைத்திருந்தால் அவர்கள் அதனை நிச்சயமாக ஏற்றுக் கொண்டிருப்பார்கள்.

அத்துடன் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நினைவுத் தூபியை அழிக்க வேண்டும் என சில தரப்புக்களால் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக தூபியை இடித்த பின்னரே எம்மால் அறிய முடிகிறது. இது தொடர்பில் எமக்கு முன்னரே தெரியப்படுத்தியிருந்தால் நாம் இவ்வாறான விபரீதம் ஏற்பட முன்னதாகவே உரிய தரப்புக்களுடன் பேசி அதனை சுமூகமாக தீர்த்து வைத்திருக்க முடியும்.

எதிர்காலத்தில் இதுபோன்ற இனங்களுக்கிடையே குரோதங்களைத் தோற்றுவிக்கும் சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க அனைவரும் முயற்சிக்க வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்க்கப்பட வேண்டிய ஓர் விடயம் இன்று வன்முறை வரை வளர்ந்துவிட்டது.என மேலும் அவர் தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad