கண்டி நகர மற்றும் அக்குரணை பாடசாலைகள் ஒரு வாரத்திற்கு பூட்டு - News View

About Us

About Us

Breaking

Friday, December 4, 2020

கண்டி நகர மற்றும் அக்குரணை பாடசாலைகள் ஒரு வாரத்திற்கு பூட்டு

கண்டி நகர எல்லைக்குட்பட்ட மற்றும் அக்குரணை பிரதேச பாடசாலைகளை மேலும் ஒரு வாரத்திற்கு தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே இவ்வறிவிப்பை விடுத்துள்ளார் .

அந்த வகையில், மாணவர்களினதும், பொதுமக்களினதும் பாதுகாப்புக் கருதி, எதிர்வரும் வாரமும் கண்டி நகரிலுள்ள 45 பாடசாலைகளையும், அக்குரணை பிரதேசத்திலுள்ள 5 பாடசாலைகளையும் தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கண்டி நகரம் மற்றும் அக்குரணை பகுதிகளில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டதால், கடந்த நவம்பர் 26ஆம் திகதி வியாழக்கிழமை முதல் இன்று (04) வரை, கண்டி நகர எல்லைக்குட்பட்ட பாடசாலைகளை மூட, ஆளுநர் நடவடிக்கை எடுத்திருந்தார்.

சுகாதாரப் பிரிவினர், கல்வி, போக்குவரத்து தொடர்பான அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இடையே இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

மேலும் இன்று கண்டி போகம்பறை பிரதேசத்தில் கொவிட்-19 தொற்றுக்குள்ளான 12 பேர் அடையாளம் காணப்பட்டதனால் சுகாதாரப்பிரிவினரினால் குறித்த பிரதேசத்திற்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம் உள்ளிட்ட இவ்வாறான அனைத்து விடயங்களையும் அவதானித்து பாடசாலைகளை மேலும் ஒரு வாரத்திற்கு மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(எம்.ஏ. அமீனுல்லா)

No comments:

Post a Comment