தெற்காசியாவின் மின் கட்டணம் கூடிய நாடு இலங்கையாகும் - ஜோன் செனவிரத்ன - News View

About Us

About Us

Breaking

Sunday, November 29, 2020

தெற்காசியாவின் மின் கட்டணம் கூடிய நாடு இலங்கையாகும் - ஜோன் செனவிரத்ன

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்) 

மின் உற்பத்தி நிலையங்களால் நாட்டுக்கு வருமானம் இல்லாவிட்டாலும் பாரியளவில் நஷ்டம் ஏற்படுவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் தெற்காசியாவின் மின் கட்டணம் கூடிய நாடு இலங்கையாகும் என ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தில் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை, நீர் வழங்கல், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், மின் உட்பத்தி நிலையங்கள் நாட்டை நாளுக்கு நாள் கடன் நிலைக்கு கொண்டுசெல்லும் நிறுவனங்களாகும். இந்த நிறுவனங்களால் லாபத்தை எதிர்பார்க்க முடியாது. அதனால் லாபம் இல்லாவிட்டாலும் ஏற்படும் நட்டத்தை கட்டுப்படுத்திக் கொள்ள அனைத்து அரசாங்கங்களும் நடவடிக்கை எடுத்தபோதும் எதிர்பார்த்த பெறுபேற்றை பெற்றுக் கொள்ள முடியவில்லை.

மின்சார சபை கூடுதலாக செயற்படுவது டீசல் மூலமாகும். அதற்காக பாரியளவில் நிதி செலவிடப்படவேண்டி ஏற்படுகின்றது. இதற்காக செலவிடப்படும் நிதியை மின் கட்டணத்தில் இருந்து பெற்றுக் கொள்ள முடியாது. நிவாரண அடிப்படையிலேயே வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்படுகின்றது.

அப்படி இருந்தும் தெற்காசியாவில் மின் கட்டணம் கூடிய நாடு இலங்கையாகும். அதனால் எமது நாட்டுக்கு வரும் முதலீட்டாளர்களும் தொழிற்சாலைகளை ஆரம்பிக்கும்போது மின் கட்டணம் தொடர்பில் மாற்றுவழி ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என்றே தெரிவிக்கின்றனர். 

2005க்கு முன்னர் எமது நாட்டில் மின் உற்பத்தி மகாவலி நீர்த் தேக்கம் மற்றும் ரக்ஷ்பான மின் உற்பத்தி நிலையங்களால் மாத்திரமே நீர் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. அது தவிர மின் உற்பத்தி டீசல் ஊடாகவே பெற்றுக் கொண்டோம். அதன் பின்னரே 2007 இல் நுரச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு அதன் மூலம் மின்சாரம் பெற்றுக் கொள்ளப்படுகின்றது.

அதேபோன்று (எல்.என்.ஜி.) திரவ இயற்கை எரிவாயு அமைக்கப்பட்டாலும் டீசல் ஊடாகவே அது செயற்படுகின்றது. அதனால் பாரிய செலவு ஏற்படுகின்றது அதனால் மின் உற்பத்திக்கு டீசல் செலவிடப்படுவதை குறைக்க நடவடிக்கை எடுப்பதன் மூலமே ஏற்படும் நட்டத்தை கட்டுப்படுத்தலாம் என்றார்.

No comments:

Post a Comment