மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வெளிமாவட்டங்களிலிருந்து வருகை தருவோர் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்வோரினது விபரங்களை திரட்டுவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாக ஆராய்வதற்காக மட்டக்களப்பு மாவட்ட கொவிட்-19 கொரோனா தடுப்பு விசேட செயலணியின் கூட்டம் நேற்று (01) மாலை மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றபோதே, பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் சிகை அலங்கார நிலையங்களை இன்று (02) முதல் திறப்பதற்கு மாவட்ட கொவிட்-19 தடுப்புச் செயலணி அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த ஒரு வாரகாலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் மூடப்பட்டிருக்கும் சிகை அலங்கார நிலையங்களை இன்று முதல் திறப்பதற்கு அனுமதிப்பதுடன், கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படாத பிரதேசங்களிலும் சிகை அலங்கார நிலையங்களை திறக்க அனுமதிக்கப்படுகின்றது. சிகை அலங்காரம் செய்வதற்கு மாத்திரம் அனுமதி வழங்குவது எனவும், சுகாதார நடைமுறைகளை பேணி சிகை அலங்காரத்தை செய்ய வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
அத்துடன், மாவட்டத்தில் கொரோனா பரவுவதை தடுக்கும் பொருட்டு இறுக்கமான இன்னும் சில தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வெளிமாவட்டங்களிலிருந்து வருகின்றவர்களினதும், மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்குச் செல்பவர்களினதும் பெயர் விபரங்களை மாவட்டத்தின் எல்லைகளான வெருகல், பெரியநீலாவணை, பதுளை வீதி, றெதிதென்ன போன்ற இடங்களில் பொலிசார் பதிவுகளை மேற்கொள்ளுதல்.
அவர்களின் விபரங்களை மாகாண சுகாதார பணிமனைக்கு அனுப்புவதுடன், அவர்களைக் கண்காணித்து தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்தல்.
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து இலங்கை போக்குவரத்து சபைக்கான பஸ் வண்டிகள், அதேபோன்று தனியார் பஸ் வண்டிகள் மாவட்டத்துக்கு வெளியே செல்வது தொடர்பில் விபரங்களை பெற்றுக்கொள்ளுதல்.
மாநகர, நகர, பிரதேச மட்டங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஊடாக நடவடிக்கை எடுத்தல்.
மாவட்டத்திலிருந்து அத்தியாவசிய சேவைகளுக்காக வெளிமாவட்டங்களுக்கு செல்வோர், அவர்களின் திணைக்களத் தலைவர்களுக்கு அறிவித்தல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந், மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவன், மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் லக்சிறி விஜேயசேன, பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி, சுகாதார வைத்திய அதிகாரிகள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர், பாதுகாப்பு அதிகாரிகள் பிரதேச செயலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
(எம்.எஸ்.எம். நூர்தீன்)
No comments:
Post a Comment