ஜனாதிபதி ட்ரம்ப் மேற்கொண்டு வரும் சட்ட நடவடிக்கைகள் செலவுக்காக குடியரசு கட்சியினர் 60 மில்லியன் டொலர்கள் நிதி திரட்ட முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த 3ம் திகதி நடந்து முடிந்த நிலையில், தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 264 தேர்தல் வாக்குகளையும், குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளார். ஜோ பைடனுக்கு 50.5 சதவீத வாக்குகள் கிடைத்துள்ள நிலையில், ட்ரம்பிற்கு 47.8 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன.
அமெரிக்காவின் 50 மாகாணங்களில் இதுவரை 46 இடங்களில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஜார்ஜியா, பென்சில்வேனியா, வடக்கு கரோலினா, நவேடா ஆகிய 4 மாகாணங்களில், வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வந்த நிலையில் ஜார்ஜியா, பென்சில்வேனியா மாகாணங்களில் ஜோ பைடன் முன்னிலை வகிப்பதாக செய்திகள் வெளியாகின.
தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்துள்ளதாக ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். ஜார்ஜியா மாகாணத்தில் பதிவான வாக்குகளை மறுபடியும் எண்ண உத்தரவு விடுமாறு கோரி நீதிமன்றத்தில் ட்ரம்ப் தொடர்ந்த வழக்கு தள்ளுபடியானது.
இந்நிலையில், ஜார்ஜியாவில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த ஜார்ஜியா மாகாண அரசு திடீரென உத்தரவிட்டுள்ளது. ஜார்ஜியா தேர்தல் முடிவுகளில் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசம் இருப்பதால் மறுவாக்கு எண்ணிக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோ பைடன் முன்னிலை வகித்து வரும் மேலும் சில மாகாணங்களிலும், மறு வாக்கு எண்ணிக்கை நடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளை ட்ரம்ப் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், ட்ரம்ப் மேற்கொண்டு வரும் சட்ட நடவடிக்கைகளின் செலவுகளுக்காக குடியரசு கட்சியின் சார்பில் நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக அக்கட்சியினர் கொடையாளிகளிடம் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், சுமார் 60 மில்லியன் டொலர்கள் நிதி திரட்ட அவர்கள் முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment