சார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் கொரோனா பாதுகாப்பு தொடர்பான புத்தகங்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. சார்ஜா கண்காட்சி மையத்தில் நடந்து வரும் 39-வது சர்வதேச புத்தக கண்காட்சி நாளை (சனிக்கிழமை) நிறைவடைய இருக்கிறது.
இந்த ஆண்டு நடைபெற்று வரும் புத்தக கண்காட்சியில் அமீரகம், ஓமன், இந்தியா, சவுதி அரேபியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தக நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகளுடன் இந்த கண்காட்சி நடந்து வருகிறது. மேலும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள பல்வேறு புத்தக நிறுவனங்களில் கொரோனா பாதுகாப்பு தொடர்பான புத்தகங்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன.
இந்த புத்தக நிறுவனங்களில் கண்காட்சியை பார்வையிட வரும் பொதுமக்கள் அதிக அளவில் கொரோனா பாதுகாப்பு தொடர்பான புத்தகங்களை வாங்கி வருகின்றனர். இந்த நூல்கள் ஆங்கிலம், அரபி, மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இடம் பெற்றுள்ளன.
இந்த கண்காட்சிக்கு வரும் பொதுமக்கள் கொரோனா தொடர்பான புத்தகங்களை கேட்டு வருகின்றனர். அதற்கு ஏற்ற வகையில் புத்தக நிறுவனங்களும் தேவைக்கேற்ற புத்தகங்களை இருப்பு வைத்துள்ளது.
மேலும் கொரோனா பாதிப்பின் காரணமாக மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தம் உள்ளிட்டவற்றை போக்கும் வகையிலான புத்தகங்களும் இங்கு இடம் பெற்றுள்ளது.
இந்த கண்காட்சிக்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒவ்வொரு நாளும் இரவு கண்காட்சி நடைபெறும் பகுதி முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் மிகவும் பாதுகாப்பானதொரு கண்காட்சியாக இது இருந்து வருகிறது.
இந்த கண்காட்சியானது நாளையுடன் (சனிக்கிழமை) நிறைவடைய இருப்பதால் இதனை பார்த்து விட வேண்டும் என பலர் ஆர்வத்துடன் ஒன்லைன் மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் இலக்கியம், கலை, கலாசாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் அனைத்தும் காணொலி காட்சி வழியாக நடத்தப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.

No comments:
Post a Comment