கொழும்பு துறைமுகத்தின் பிரதான வாயிலின் புதிய கொள்கலன் நுழைவாயிலில் கடமையில் ஈடுபட்டிருந்த இரு சுங்கப் பரிசோதகர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரான மேலதிக சுங்க பணிப்பாளர் நாயகம் சுனில் ஜயரட்ண இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பிராதான நுழைவாயிலின் இரு சுங்கப் பரிசோதகர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டமை அடுத்து சுங்கத் திணைக்களத்தில் பொருட்களை அனுமதிப்பதைக் கட்டுப்படுத்த சுங்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த நுழைவாயிலில் கடமையில் இருந்த 25 சுங்க அதிகாரிகள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுங்கத் துறை அதிகாரி சுனில் ஜயரத்ன தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, அடுத்த சில நாட்களில் சுங்கத்திலிருந்து அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரமே கொள்கலன்களை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என ஜயரத்ன மேலும் தெரிவித்தார்.
இதன் காரணமாக அடுத்த சில நாட்களிற்கு அத்தியாவசிய பொருட்களை இறக்கும் பணிகளில் மாத்திரம் சுங்கத் திணைக்களம் ஈடுபடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்களை சுங்கத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ள அவர் இணைய வசதிகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment