‘எச்1 பி’ விசா வழங்குவதை நிறுத்தி வைக்கும் ஜனாதிபதி டிரம்பின் உத்தரவுக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறாமல் அங்கு தங்கியிருந்து வேலை செய்வதற்காக வெளிநாட்டினருக்கு அந்த நாடு ‘எச்1 பி’ விசா வழங்கி வருகிறது. இந்த ‘எச்1 பி’ விசா வழக்கமாக 3 ஆண்டுகள் வரையே நிர்ணயித்து வழங்கப்படும். பிறகு தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்து கொள்ள முடியும்.
இந்த விசாவை உலக நாடுகளில் அதிக அளவு இந்தியர்களும், சீனர்களும்தான் பெற்று வருகின்றனர். குறிப்பாக ஐ.டி. என்றழைக்கப்படுகின்ற தகவல் தொழில் நுட்பத்துறையில் பணியாற்றுகிறவர்கள் மத்தியில் இந்த விசாவுக்கு தனி மவுசு உள்ளது.
இந்த நிலையில் கொரோனா காரணமாக லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வேலையை இழந்து வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால் வேலை வாய்ப்புகளில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வந்து வேலை செய்வதற்காக வழங்கப்படும் ‘எச்1 பி’, ‘எச்2 பி’, ‘எல்’ மற்றும் ‘ஜே’ விசாக்கள் வழங்குவதை இந்த ஆண்டு இறுதி வரை நிறுத்தி வைக்க கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதி டிரம்ப் உத்தரவு பிறப்பித்தார்.
அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் டிரம்பின் இந்த முடிவை கடுமையாக எதிர்த்தன. டிரம்பின் இந்த கொள்கை வணிகங்களுக்கும் பொருளாதாரத்துக்கும் மிகப் பெரிய தீங்கை விளைவிக்கும் எனவும் எச்சரித்தன.
மேலும் அமெரிக்காவைச் சேர்ந்த பல ஐ.டி. நிறுவனங்கள் டிரம்ப் நிர்வாகத்தின் முடிவை எதிர்த்து கலிபோர்னியா மாகாணத்தின் வடக்கு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ஜெப்ரி வைட் ‘எச்1 பி’ விசா வழங்குவதை நிறுத்தி வைக்கும் டிரம்பின் உத்தரவுக்கு தடை விதித்து தீர்ப்பளித்தார்.
நீதிபதி தனது தீர்ப்பில் “குடியேற்றக் கொள்கையில் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தல் மற்றும் குடியேற்றமற்ற வெளிநாட்டினரின் வேலை வாய்ப்பு தொடர்பாக உள்நாட்டுக் கொள்கை அமைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இல்லை. அதாவது குடியேற்ற கொள்கையை அமைக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உள்ளது. ஜனாதிபதிக்கு அல்ல என்பதை அரசியலமைப்பு தெளிவுபடுத்துகிறது” என குறிப்பிட்டார்.
இதனிடையே வேலை வாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை அளிப்பது உறுதி செய்யும் வகையில் ‘எச்1 பி’ விசா வழங்கும் நடைமுறையை மாற்றி அமைக்க வகை செய்யும் சட்ட மசோதா ஒன்றை குடியரசு கட்சி எம்.பி. மோ புரூக்ஸ் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார்.
“அமெரிக்க வேலை வாய்ப்புகள் முதல் சட்டம்” நிறுவனங்களில் ஏற்கனவே இருக்கும் அமெரிக்கர்களை வேலையிலிருந்து நீக்கி விட்டு ‘எச்1 பி’ விசாவில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை பணியில் அமர்த்துவதற்கு தடை விதிக்கும்.
மேலும் தவிர்க்க முடியாத சூழலில் மட்டுமே வெளிநாட்டு தொழிலாளர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் என்பதை நிறுவனங்கள் உறுதி செய்ய வலியுறுத்தும். இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் அது ‘எச்1 பி’ விசாதாரர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும்.
No comments:
Post a Comment