புதிய அரசியலமைப்பில் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் அரசியலில் பங்குப்பற்றுவதற்கு தடை விதிக்கப்படும் என ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதியினை அடிப்படையாகக் கொண்டு 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்க தீர்மானித்தோம் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.
என்.எம். பெரேரா மத்திய நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கட்சித் தலைவர் கூட்டம் தொடர்பில் தெளிவுப்படுத்துவது அவசியமாகும்.
இரண்டாம் குடியரசு அரசியலமைப்பில் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை அறிமுகம் செய்யப்பட்டது.
நிறைவேற்றதிகார முறைமையினால் நாடாளுமன்றத்துக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் ஆரம்ப காலத்தில் இருந்து நெருக்கடி ஏற்பட்டது.
நல்லாட்சி அரசாங்கத்தில் நிறைவேற்றதிகாரம் மூன்றாக பிளவுப்பட்டது. இதன் காரணமாக நல்லாட்சி அரசாங்கம் பலவீனமடைந்தது.
ஒரு தனிநபருக்கு அதிகாரங்கள் வரையறுக்கப்படாமல் வழங்குவது பொருத்தமற்றது என்பது லங்கா சமசமாஜக் கட்சியின் கொள்கையாகும்.இதில் எவ்வித மாற்றமும் கிடையாது.
இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் அரசியலில் செல்வாக்கு செலுத்த கூடாது என்பதை ஒன்றினைந்து சுட்டிக்காட்டினோம்.
இதனையடுத்து, புதிய அரசியலைப்பு தொடர்பான முதற்கட்ட வரைபு எதிர்வரும் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் புதிய அரசியலைப்பு உருவாக்கப்படும். புதிய அரசியலமைப்பில் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் அரசியலில் பங்குப்பற்றுவதற்கு தடை விதிக்கப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்” என அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment