அரச காணிகளில் முன்னெடுக்கப்படும் கருங்கல் அகழ்வு தொழில் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவினால் அது தொடர்பான அறிக்கை நேற்று (18) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
காணி ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.சீ.எம். ஹேரத்தின் பங்கேற்புடனான குழுவில், 12 உறுப்பினர்கள் காணப்படுகின்றனர். குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அக்குழுவின் பரிந்துரைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பிரதமர் கேட்டறிந்தார்.
கருங்கல் தொழிலில் ஈடுபடும் வர்த்தகர்கள் நடைமுறையில் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை குறைத்து கொள்வதற்கு பயன்பாடு மற்றும் அகழ்வு கட்டணங்கள் ஒரே முறையின் கீழ் செயற்படுத்தப்படும் வகையில் திருத்தம் மேற்கொள்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது அறிவுறுத்தினார்.
அதற்கமைய கருங்கல் அகழ்வு தொழிலில் ஈடுபடுபவர்களின் நிலுவையிலுள்ள வரி கொடுப்பனவுகளை சலுகை முறையின் கீழ் செலுத்தக் கூடியவாறு திருத்தம் மேற்கொள்ளுமாறும் பிரதமர் வலியுறுத்தினார்.
அரச காணிகளில் கருங்கல் அகழ்வு தொடர்பில் அனுமதி பத்திரங்களை பெற்றுக் கொள்ளும் போது பல்வேறு நிறுவனங்களுக்கு சென்று பரிந்துரை கடிதங்களை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாக இச்சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய கருங்கல் உற்பத்தி சங்கத்தின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
அதற்கு தீர்வாக, அகழ்விற்கான அனுமதி பத்திரங்களை வழங்கும்போது பொதுவான ஒரு முறைக்கு உட்படுத்தவும், சுற்றுச்சூழல் மற்றும் தொல்பொருள் பரிந்துரையை புவியியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகத்தில் மாத்திரம் பெறவும், ஒரு பாறை பிரித்தெடுக்கும் திட்டத்திற்கு ஒரு முறை மட்டுமே தொல்பொருள் பரிந்துரைகளை வழங்கவும் இதன்போது முடிவு செய்யப்பட்டது.
சூரியவெவ பிரதேசத்தில் குகைகள் மற்றும் குளங்களை கொண்ட நிலங்களில் கடந்த காலத்தில் கருங்கல் அகழ்விற்கான அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும், அங்குள்ள பாரிய கற்பாறைகள் இரண்டில் ஒரு கற்பாறையில் இதுவரை கருங்கல் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.
இவை தொடர்பில் அவதானம் செலுத்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், அந்த சந்தர்ப்பத்திலேயே தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திசாநாயக்கவை அது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறு அறிவுறுத்தினார்.
No comments:
Post a Comment