நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை நாளை, விக்னேஸ்வரன் மீதான வழக்கை வாபஸ் பெறுமாறு டெனீஸ்வரனிடம் பல தரப்பினரும் கோரிக்கை - News View

About Us

About Us

Breaking

Monday, September 14, 2020

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை நாளை, விக்னேஸ்வரன் மீதான வழக்கை வாபஸ் பெறுமாறு டெனீஸ்வரனிடம் பல தரப்பினரும் கோரிக்கை

முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு எதிராக சட்டத்தரணி டெனிஸ்வரன் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மீளப்பெறுமாறு அரசியல் அவதானிகள், தமிழ் தேசிய ஆர்வலர்கள் மற்றும் தமிழ் சட்டத்தரணிகள் பலர் அவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சட்டத்தரணி டெனிஸ்வரன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தவறானது என்றும் அவரை மீள அமைச்சராக உள்வாங்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் 29.06.2018 வழங்கிய இடைக்காலக் கட்டளையை செயற்படுத்த தவறிவிட்டார் என சட்டத்தரணி டெனிஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றை நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்திருந்தார்.

பிரதான வழக்கில் சட்டத்தரணி டெனிஸ்வரன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தவறானது என வட மாகாண சபை கலைக்கப்பட்டதன் பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் 05.08.2019 தீர்ப்பளித்தது.

இடைக்காலக் கட்டளையை செயற்படுத்த நீதியரசர் விக்னேஸ்வரன் தவறிவிட்டார் என்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்காக நாளை எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

நீதியரசர் விக்னேஸ்வரன் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அவர் பாராளுமன்றில் ஆற்றிய உரைகள் காரணமாக சிங்கள அதிதீவிர சக்திகளின் கோபத்துக்கு அவர் ஆளாகியுள்ளார். அத்தரப்புக்கள் இந்நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தற்போது கூர்ந்து அவதானிக்க தொடங்கியுள்ளனர். 

இவ்வழக்கில் நீதியரசர் விக்னேஸ்வரன் குற்றவாளியாக காணப்பட்டால் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு அவர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க வேண்டி வரும் என்ற நிலையை இத்தரப்பினர் பெரிதும் விரும்புகின்றனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சட்டத்தரணி கலாநிதி. குமாரவடிவேல் குருபரன், நீதியரசர் விக்னேஸ்வரன் தான் கடமை ஆற்றிய நீதிமன்றங்களில் கூண்டில் ஏறி சாட்சி சொல்வதை தவிர்ப்பது தமிழ் சட்ட சமூகத்தின் மாண்பை காப்பாற்றுவதற்கு அவசியம். 

கட்சி வேறுபாடுகளுக்கப்பால் தமிழ் அரசியல்வாதி அதுவும் ஒரு சட்டத்தரணி தொடுத்த வழக்கால் ஓர் நீதியரசர் குற்றவாளியாக காணப்பட்டார் என்றோ பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார் என்ற இழி நிலை ஏற்படக் கூடிய சந்தர்ப்பத்தைத் தவிர்ப்பது அவசியம். 

சட்டத்தரணி டெனிஸ்வரன் இன்றைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பெருந்தன்மையாக வாபஸ் பெற வேண்டும். அப்படி அவர் செய்தால் அவர் மீதான நன் மதிப்பு உயரும் எனக் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment