ராஜபக்ஷர்களின் குடும்ப பலத்தை பாதுகாக்கவே புதிய அரசியலமைப்பு திருத்தத்தை அரசாங்கம் கொண்டுவர முயற்சிக்கின்றது - முஜூபுர் ரஹூமான் - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 25, 2020

ராஜபக்ஷர்களின் குடும்ப பலத்தை பாதுகாக்கவே புதிய அரசியலமைப்பு திருத்தத்தை அரசாங்கம் கொண்டுவர முயற்சிக்கின்றது - முஜூபுர் ரஹூமான்

மக்களை ஏமாற்றும் அரசியல் மீண்டும் ...
(செ.தேன்மொழி)

ராஜபக்ஷர்களின் குடும்ப பலத்தை பாதுகாக்கவே புதிய அரசியலமைப்பு திருத்தத்தை அரசாங்கம் கொண்டுவர முயற்சிக்கின்றது என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜூபுர் ரஹூமான், அரசாங்கம் ஜனநாயக தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவர முயற்சித்தால் அதற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் கூறியதாவது, பொதுத் தேர்தல் பிரசாரங்களின் போது நாட்டுக்கு சேவை செய்வதற்காக தங்களுக்கு பலத்தை பெற்றுக் கொடுக்குமாறே ஆளும் தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அண்மித்த ஆசனங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. இந்நிலையில் இதனைக் கொண்டு நாட்டுக்கு சேவை செய்வதை விடுத்து, 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நீக்குவது தொடர்பிலேயே அரசாங்கம் அக்கறை செலுத்தி வருகின்றது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன், இலட்சத்துக்கும் அதிமான நபர்களின் தொழில் வாய்ப்புகள் இல்லாமலாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இவற்றுக்கான தீர்வினை அரசாங்கத்தினால் பெற்றுக் கொடுக்க முடியாமல் போயுள்ளது.

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொண்டுள்ள அரசாங்கம் பகுதி பகுதியாக அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவர வேண்டும் என்ற அவசியமில்லை. அவர்கள் அரசியலமைப்பை மாற்ற வேண்டும் என்றால், தற்போது உள்ள அரசியலமைப்பை நீக்கி விட்டு புதிய அரசியலமைப்பை உருவாக்கி அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து ஆதரவை பெற்றுக் கொள்ளலாம்.

அரசாங்கம் ராஜபக்ஷர்களின் குடும்ப நலனை கருத்திற் கொண்டே புதிய அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவர முயற்சிக்கின்றதென்பது இன்று அரசியல் ரீதியாக பேசப்பட்டு வரும் விடயமாகும். இவ்வாறு ஒரு குடும்பத்தின் எண்ணங்களை நிறைவேற்றுவதற்காக அரசியலமைப்பு திருத்தம் ஒன்று கொண்டுவரப்பட்டால் நாங்கள் அதற்கு எமது எதிர்ப்பை தெரிவிப்போம். அரசாங்கத்திற்கு மக்கள் பலத்தை பெற்றுக் கொடுத்துள்ள போதிலும், இன்னமும் ஒரு வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்க முடியாமலே இருக்கின்றது.

சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பில் ஆளும் தரப்பு எம்.பிக்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஆளுந்தரப்பு உறுப்பினர்களால் சுயாதீனமாக செயற்பட முடியவில்லை என்பதற்காவே இந்த சுயாதீன ஆணைக்குழுக்களை விமர்சித்து வருகின்றனர். அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் உள்ளிட்ட ஆளும் தரப்பு உறுப்பினர்கள் அனைவரினதும் ஆதரவுடனே 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டது. தற்போது அவர்களே அதனை சிக்கலானது என்று கூறிவருகின்றனர். 

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாட்டின் காரணமாகவே கடந்த கால தேர்தல்களின் போது முறைப்பாடுகள் குறைவடைந்துள்ளன. ஏனைய தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் இந்த தேர்தல்காலங்களிலேயே முறைப்பாடுகள் குறைவாக பதிவாகியுள்ளன.

19 ஆவது அரசியலமைப்பை நீக்கி மக்கள் மயமான ஜனநாயக கொள்ளைகையை கொண்ட அரசியலமைப்பு திருத்தத்தை அரசாங்கம் கொண்டு வந்தால் அதற்கு ஆதரவளிப்பதுடன், அந்த கொள்கைகளுக்கு புறம்பாக ஒரு குடும்பத்தின் எண்ணத்தை நிறைவேற்றுவதற்காக புதிய அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட்டால் அதனை கடுமையாக கண்டிப்பதுடன், அதற்கு எமது ஒத்துழைப்பையும் பெற்றுக் கொடுக்க மாட்டோம் எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment