19 ஆவது திருத்தம் தொடர்பில் கவனம் செலுத்துவது 9 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது செயற்பாடாக அமையும் : நாலக கொடஹேவா - News View

About Us

About Us

Breaking

Sunday, August 9, 2020

19 ஆவது திருத்தம் தொடர்பில் கவனம் செலுத்துவது 9 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது செயற்பாடாக அமையும் : நாலக கொடஹேவா

Dr. Nalaka Godahewa rejects allegations on GRID rankings
(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு கிடைக்கப் பெற்றுள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் மக்களின் முன்னேற்றத்திற்காகவும், நாட்டின் இறையாண்மை பாதுகாப்பிற்காகவும் பயன்படுத்தப்படும். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் தொடர்பில் கவனம் செலுத்துவது 9 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது செயற்பாடாக அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா தெரிவித்தார்.

கம்பஹா நகரில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஆட்சியாளர்களுக்கு அளவுக்கு மீறி அதிகாரம் கிடைக்கும் போது அரச நிர்வாகம் ஒரு கட்டத்தில் சர்வாதிகார போக்கினை கொண்டதாக மாறிவிடும். இலங்கையிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீது நம்பிக்கை கொண்டு பெரும்பாலான மக்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கு பெரும்பான்மை ஆதரவை வழங்கியுள்ளார்கள்.

கிடைக்கப் பெற்றுள்ள ஆணையதிகாரத்தை ஒருபோதும் தவறாக பயன்படுத்த மாட்டோம். மக்களின் முன்னேற்றம், நாட்டின் இறையான்மை பாதுகாப்பு ஆகியவற்றுக்காக பெரும்பான்மை பலம் முழுமையாக பயன்படுத்தப்படும். பலதரப்பட்ட தரப்பில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் தொடர்பில் 9 ஆவது பாராளுமன்றத்தில் உரிய கவனம் செலுத்தப்படும்.

சேறுபூசும் அரசியல் கலாச்சாரத்தை அரசியல்வாதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். மக்களை ஏமாற்ற முடியாது. அரசியல்வாதிகளை காட்டிலும் புத்திசாலிகளாக இன்று மக்கள் உள்ளார்கள். நாட்டுக்கும், மக்களுக்கும் ஆற்றும் சேவைகளை முன்வையுங்கள் மக்கள் முழுமையான ஆதரவு வழங்குவார்கள்.

விருப்பு வாக்கு முறைமை இணக்கமாக செயற்படும் அரசியல்வாதிகளுக்கு இடையில் இறுதியில் முரண்பாட்டை தோற்றுவிக்கும். எமது தரப்பிலும் இவ்வாறான சம்பவங்ள் இடம்பெற்றன. ஆகவே தேர்தல் முறைமையிலும் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment