ஜே.ஆர்.ஜயவர்தன, பிரேமதாஸ, விஜேதுங்க, மஹிந்த ஆகியோருக்கு இருந்த நிறைவேற்று அதிகாரம் கோட்டாபயவுக்கு இல்லை - முன்னாள் அமைச்சர் விஜயமுனி சொய்ஸா - News View

Breaking

Post Top Ad

Wednesday, July 29, 2020

ஜே.ஆர்.ஜயவர்தன, பிரேமதாஸ, விஜேதுங்க, மஹிந்த ஆகியோருக்கு இருந்த நிறைவேற்று அதிகாரம் கோட்டாபயவுக்கு இல்லை - முன்னாள் அமைச்சர் விஜயமுனி சொய்ஸா

மங்களவின் கருத்துக்கள் ஐக்கிய ...
(கஹட்டோவிட்ட ரிஹ்மி)

"தற்போது மக்களை பயம் காட்டி வாக்குகளை சேகரிக்கும் நிலைக்கு ஆளும் தரப்பினர் தள்ளப்பட்டுள்ளனர். தமக்கு வாக்களிக்காவிட்டால் குப்பைகளை அள்ள மாட்டோம் என்று மக்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கின்றனர்" என்று முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளருமான காமினி விஜித் விஜயமுனி சொய்ஸா தெரிவித்தார். 

நேற்றுமுன்தினம் (27) முன்னாள் பிரதேச சபை வேட்பாளர் பவாஸ் அவர்களின் ஏற்பாட்டில் அத்தனகல்ல தேர்தல் தொகுதியிலுள்ள பல்வேறு முஸ்லிம் கிராமங்களில் வேட்பாளர் விஜயமுனிய சொய்ஸா அவர்கள் பல மக்கள் சந்திப்புக்களில் ஈடுபட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நீங்கள் இந்த நாட்டில் இரண்டாம் மட்ட பிரஜைகள் அல்லர். உங்களுக்கு இந்த நாட்டில் சம உரிமை இருக்கிறது. உங்களது விருப்பப்படி உடுக்கவும், மார்க்க கடமைகளை பின்பற்றவும், கூட்டங்கள் நடாத்தவும், கருத்து தெரிவிக்கவும் நாட்டில் தலைவர்களை உருவாக்கவும் உங்களுக்கு உரிமை இருக்கிறது. 

இது இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசாகும். அதனை இல்லாமலாக்குவதற்கு கோட்டாபய ராஜபக்சவுக்கு நாம் இடமளிக்கப் போவதில்லை. கோட்டாபயவுக்கு அதிகாரமும் இல்லை. மூன்றிலிரண்டும் இல்லை. அதனை நாங்கள் தடுத்திக்கிறோம். நாம் 19 ஆம் திருத்தத்தினை உருவாக்கி விட்டே வெளியேறினோம். 

ஜே.ஆர்.ஜயவர்தன, பிரேமதாஸ, விஜேதுங்க, மஹிந்த ஆகியோருக்கு இருந்த நிறைவேற்று அதிகாரம் கோட்டாபயவுக்கு இல்லை. கோட்டாபயவுக்கு இந்நாட்டு மக்களை அச்சுறுத்தும் உரிமை கிடையாது. அதிகாரம் கிடையாது. அமையப் போகும் ஆட்சியில் பாராளுமன்றத்திற்கே அதிகாரம் உண்டு. 

சகல மத ரீதியிலான தீவிரவாதங்களையும் உருவாக்கியவர்கள் அரசியல்வாதிகள் தான்.ஒரு சமுதாயத்தில் சிறு குழு செய்யும் நடவடிக்கைக்காக அனைவர் மீதும் குற்றம் சாட்டப்படுகிறது. கட்டுவாப்பிட்டிய தேவாலயம் மீதான தாக்குதலை தொடர்ந்து மினுவாங்கொட பிரதேசத்தில் அரசியல்வாதிகள் பாதைகளில் இறங்கி வன்முறையில் ஈடுபட்டனர். 

எமது புதிய அரசாங்கத்தில் உங்களை நாம் பாதுகாப்போம். நீங்கள் எம்மிடம் கேட்பதானால பள்ளிவாசல் கட்ட இடம் ஒன்றை கேட்பீர்கள். அல்லது சிங்கள மனிதரிடமிருந்து மாடு ஒன்றினை வாங்கி சமைப்பதற்காக அறுப்பதற்கு கேட்பீர்கள். முஸ்லிம்கள் அறுக்கும் ஆடு, கோழிகளை சிங்கள மக்கள் விரும்பி சாப்பிடுகிறார்கள். 

நீங்கள் இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை செய்தவர்கள். உங்களது வியாபார நிலையங்களில் ஆயிரக்கணக்கான சிங்கள, பௌத்தர்கள் பணி புரிகின்றனர். ஆனால் எமது சில முட்டாள்தனமான சிந்தனையுள்ளவர்கள் முஸ்லிம் கடைகளை புறக்கணிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்கின்றனர். நாம் அவ்வாறு புறக்கணிப்பின் சிங்களவர்களின் தொழில்களே இல்லாமல் போகின்றன. இவற்றை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். 

நாங்கள் முஸ்லிம்களுக்கு ஏசி விட்டு பெண்களை சம்பாதிப்பதற்காக அரபு நாடுகளுக்கு அனுப்புகிறோம். அவ்வாறே யுத்தம் காலம் தொடர்பில் சர்வதேச வாக்கெடுப்புக்கள் இடம்பெறும் போது முஸ்லிம் நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்து வந்திருக்கின்றன. யுத்தம் செய்வதற்கு பாகிஸ்தான், இலங்கைக்கு உதவியது. 

மன்னர்களுடைய காலத்தில் இருந்து தொடர்ச்சியாக இருந்து வரும் சிங்கள - முஸ்லிம் மக்களுக்கிடையிலான பிணைப்பை முறிப்பதற்கு எம்மால் இடமளிக்க முடியாது. ஆனால் வங்குரோத்து அரசியல்வாதிகள் இனவாதத்தினை தூண்டி வருகிறார்கள். ஆனால் புத்த தருமம் என்பது அதுவல்ல. அவற்றை அறிந்த சிறந்த பௌத்தர்கள் தூய்மையான முறையில் மக்களுக்கு உபதேசம் செய்து வருகிறார்கள். 

எமது நாட்டின் கலாச்சாரத்திற்கு முஸ்லிம்கள் மதிப்பு சேர்த்துள்ளார்கள். அவற்றை நன்கு அறிந்த ஒரு அரசியல்வாதிதான் இந்த விஜயமுனி சொய்ஸா. நான் கற்றது தல்துவை சீதாவாக்க பாடசாலையில். அங்கு பாரிஸ், யூசுப், கவுஸ் முதலாளி ஆகியோர் என்னுடன் கற்றவர்கள். அவர்களுடன் பாடசாலை காலத்தில் சண்டையும் பிடித்துள்ளோம். ஆனால் வீட்டில் சொல்லவில்லை. சொன்னால் எங்களுக்கு அடி விழும். அவ்வாறு இருந்தது எமது ஒற்றுமை. 

இதன் போது வேட்பாளரின் விஜயமுனி சொய்ஸாவின் பிரத்தியேக செயலாளரும், நீர்ப்பாசன சபையின் முன்னாள் தலைவருமான அல்ஹாஜ் காதர், முன்னாள் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் நாஸர், முன்னாள் கலேவெல பிரதேச சபை உறுப்பினர் நிஜாம்தீன் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad