அரசுக்குள்ளிருந்து பேரம் பேசும் சக்தியை எமக்கு தாருங்கள் - யாழ். மாவட்ட வேட்பாளர் அங்கஜன் செவ்வி..!!! - News View

About Us

About Us

Breaking

Monday, July 27, 2020

அரசுக்குள்ளிருந்து பேரம் பேசும் சக்தியை எமக்கு தாருங்கள் - யாழ். மாவட்ட வேட்பாளர் அங்கஜன் செவ்வி..!!!

19ஆவது திருத்த சட்டத்தில் மாற்றம் ...
தமிழ் மக்களுக்காக அரசாங்கத்திற்குள்ளிருந்து பேரம்பேசுவதற்கான அங்கீகாரத்தினையும் பெருவாரியான ஆணையையும் சுதந்திரக் கட்சிக்கு வடக்கு மக்கள் வழங்க வேண்டும் என்று அக்கட்சியின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் வீரகேசரி ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியின்போது தெரிவித்தார்.

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி:- பொதுஜனபெரமுனவுடன் கூட்டணியைக்கொண்டுள்ள சுதந்திரக்கட்சி, யாழ்.தேர்தல் மாவட்டத்தில் தனித்து போட்டியிடத் தீர்மானித்ததன் பின்னணி என்ன?

பதில்:- சுதந்திரக்கட்சியைப் பொறுத்தவரையில் எப்போதுமே மூவினங்களையும் அரவணைத்துச் செல்வதாகவே இருந்து வருகின்றது. அந்தவகையில் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்த வேண்டிய கடப்பாடு சுதந்திரக்கட்சிக்கு இருக்கின்றது. மேலும் அரசாங்கத்தில் சுதந்திரக்கட்சி அங்கம் வகித்தாலும், தமிழ் மக்களுக்கான பேரம்பேசும் சக்தியை உருவாக்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடாக இருந்து வருகின்றது.

கட்சியில் இணைந்த நாள் முதல் இதற்கான உந்துதல்களைச் செய்து வந்திருக்கின்றேன். ஆகவே அக்காரணங்களை அடிப்படையாகக் கொண்டே தனித்து போட்டியிடுவதென தீர்மானிக்கப்பட்டது. மேலும் நான் உள்ளிட்டவர்களுக்கு சுதந்திரக்கட்சியின் ஊடாக பாராளுமன்றத்தற்கு செல்வதற்கு மக்கள் வழங்கும் அங்கீகாரமானது அவர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதற்குரிய செயற்பாடுகளை நேர்மையாகவும் இலகுவாகவும் மேற்கொள்வதற்கு வழியமைப்பதாய் அமையும்.

கேள்வி:- கடந்த ஆட்சியில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக வருவதற்கு தமிழ் மக்கள் ஏகோபித்து ஆதரவு தெரிவித்திருந்தபோதும் அவர் வாக்குறுதிகளை நிறைவேற்றாது, இனப்பிரச்சினை திர்வுக்கான முயற்சிகள் உள்ளிட்டவற்றை குழப்பியவராக உள்ளார் என்று குற்றச்சாட்டுக்கள் நீடிக்கின்றதே?

பதில்:- இனப்பிரச்சினைக்குத் தீர்வாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற விடயம் தமிழ் மக்களிடத்தில் முன்வைக்கப்பட்டு ஜனாதிபதி, பாராளுமன்றம், மற்றும் கூட்டமைப்பு ஆகிய தரப்புக்களுக்கான அங்கீகாரத்தினை மக்களும் வழங்கியிருந்தார்கள்.

இந்தச் செயற்பாட்டில் ஜனாதிபதி மைத்திரி தன்னாலான அனைத்து ஒத்துழைப்புக்களையும் நல்கினார். தமிழர்கள் தனக்கு வாக்களித்தமையை ஒருபோதும் மறந்துபோக மாட்டேன் என்று அவர் அடிக்கடி கூறுவார். இந்நிலையில் புதிய அரசியலமைப்பு செயற்பாடுகள், இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்கள் அனைத்தும் பாராளுமன்றத்தின் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டன.

கடந்த ஆட்சியில் பாராளுமன்றத்தின் அனைத்து அதிகாரங்களையும், கட்டுப்பாடுகளையும் பிரதமராக இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே கொண்டிருந்தார். அவ்வாறிருக்கையில் எந்த வகையில் அந்த முயற்சிகளுக்கு ஜனாதிபதி தடைகளை ஏற்படுத்தியிருக்க முடியும். அவ்வாறு கூறுவது பொருத்தமற்றதொன்றாகும்.

கேள்வி:- ஜனாதிபதி நேரடியாக தலையீட செய்யாது விட்டாலும் சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் இறுதி நேரத்தில் நிலைப்பாட்டை மாற்றியதாக கூறப்படுகின்றதே?

பதில்:- அவ்வாறில்லை. சுதந்திரக்கட்சி தனது முழுமையான ஒத்துழைப்புக்களையும் வழங்கியிருந்தது. ஆரம்பத்திலிருந்து அனைத்து செயற்பாடுகளிலும் சுதந்திரக்கட்சி பங்கெடுத்தே வந்திருந்தது. அவ்வாறிருக்கையில் ஐக்கிய தேசியக் கட்சியும், அவர்களின் பங்காளிகளும் வெளிநாடுகளுக்கெல்லாம் பல மில்லியன்களை செலவு செய்து விஜயங்களை மேற்கொண்டார்கள். அவ்வாறு அவர்கள் காலத்தினை இழுத்துக்கொண்டே சென்றார்களே தவிரவும் புதிய அரசியலமைப்பு பணிகளை முழுமை அடைவதற்கு முழு மனதுடன் விரும்பியிருக்கவில்லை.

அவர்கள் ஆட்சி அதிகாரத்தினை தொடர்ந்தும் தம்வசப்படுத்தியே வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும்பான்மை மக்கள் மத்தியில் செல்வாக்குச் சரிந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்கள். அதனால் இழுத்தடிப்புக்களைச் செய்தார்கள். இதுவே யதார்த்தமாக இருக்கிறது.

ஆகவே ஐக்கிய தேசியக் கட்சியும், அதன் வடக்கு கிழக்கு கிளையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மீது பழிசுமத்தி தப்பித்துக்கொள்ளப்பார்கின்றன. இந்த இரண்டு தரப்புக்களுமே முழுமையான பெறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் அதனைத் தட்டிக்கழித்து தமிழ் மக்களை ஏமாற்ற இடமளிக்க முடியாது.

கேள்வி:- பொதுஜன பெரமுனவின் அங்கத்தவர்கள் 13ஆவது, 19ஆவது திருத்தச்சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென்று கூறிவருகின்ற நிலையில் உங்களது நிலைப்பாடு என்னவாகவுள்ளது?

பதில்:- இந்த திருத்தச்சட்டங்கள் தொடர்பில் கொள்கைரீதியான முடிவுகள் எவையும் கூட்டணியின் சார்பில் எடுக்கப்படவில்லை. தேர்தல்காலத்தில் தமது வாக்காளர்களை மையப்படுத்தி வெவ்வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுவது வழமையாகும். அதுவொருபுறமிருக்கையில், 19ஆவது திருத்தச்சட்டத்தினைப் பொறுத்தவரையில் அது இரண்டு அதிகார மையங்களை தோற்றுவித்துள்ளது. அதுதொடர்பில் குழப்பகரமான நிலைமைகள் காணப்படுகின்றன. கடந்த நான்கரை வருடங்கள் இந்த திருத்தச்சட்டத்தால் முழுநாடும் முன்னோக்கிச் செல்லமுடியாத சூழல் நீடித்திருந்ததை நாம் அனுபவ ரீதியாக கண்டிருக்கின்றோம்.

ஆகவே நாட்டை அவ்விதமாக குழப்பநிலைக்கு கொண்டு செல்லும் சட்டங்களை தேசிய நலன் சார்ந்த கோணத்தில் சிந்தித்து மாற்றியமைக்க வேண்டியது அவசியமாகின்றது. தற்போது சகோதரர்கள் நாட்டின் ஜனாதிபதியாகவும், பிரதமராகவும் இருப்பதால் குழப்ப நிலைமைகள் ஏற்பாடது என்பது ஒருபுறமிருந்தாலும் எதிர்காலம் தொடர்பில் சிந்திக்கின்றபோது 19ஆவது திருத்தத்தில் மறுசீரமைப்பு அவசியமாகின்றது.

13ஆவது திருத்தச்சட்டத்திலும் மாற்றங்கள் தேவையாக இருக்கின்றது. சமூக பொலிஸ் கட்டமைப்பு, காணி அதிகாரங்கள் மேலும் அதிகமாக பகிரப்பட வேண்டியுள்ளது.ஆகவே இந்த திருத்தச்சட்டங்களில் ஆக்கபூர்வமான மறுசீரமைப்பு அவசியமாகின்றன.

கேள்வி:- தேர்தல் பிரசாரத்திற்காக அரச வளங்களைப் பயன்படுத்துவதாக உங்களுக்கு எதிராக முறைப்பாடுகளும், குற்றச்சாட்டுக்களும் காணப்படுகின்றனவே?

பதில்:- இது முழுக்க முழுக்க உண்மைக்குப் புறம்பான திட்டமிட்டவொரு குற்றச்சாட்டாகும். எந்தவொரு இடத்திலும் அவ்விதமான செயற்பாடுகளில் நான் ஈடுபட்டேன் என்பது நிரூபிக்கப்படவில்லை. நான் அரசியல் ரீதியாக வளர்ச்சிய அடைந்துவிடக்கூடாது என்பதற்காகவும், பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்றும் கருதுகின்ற அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவருமே இவ்வாறான செயற்பாட்டை திட்டமிட்டு முன்னெடுத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

“நிவாரணப்பொருட்களை ஆட்டையைப் போட்ட அரசியல்வாதி” என்று ஊடகமொன்றுசெய்தி வெளியிட்டது. அந்த ஊடகத்திற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ஹ{லே தகவல்களை வழங்கியிருக்கின்றார். அவரை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக்கியதில் பின்னணியில் செயற்பட்டவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே என்பது யாவரும் அறிந்த உண்மையாகும்.

தேர்தலொன்று அறிவிக்கப்பட்டால் அவர் ஒரு நடுவர் போன்றே செயற்பட வேண்டும். ஆனால் அவர் அவ்வாறுசெயற்படவில்லை. ஜனாதிபதி தேர்தலிலும் சரி தற்போதைய தேர்தலிலும் சரி பக்கச்சார்பாக செயற்படுகின்றார். இந்தசெயற்பாடானது தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுயாதீனத்தினையும், ஒட்டுமொத்த சுயாதீன ஆணைக்குழுக்கள் தொடர்பிலும் விமர்சனத்தினை மேலெழச் செய்துள்ளது.

மேலும் நான் நிவாரணப்பொருட்களை வழங்கியமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்கு யாழிற்கு வருகை தந்து நேரடியாகவே விசாரணைகளை மேற்கொண்டது. ஆனால் அந்த அறிக்கை வெளியிடப்படவில்லை. நான் அரசவளங்களை பயன்படுத்தி பிரசாரம் செய்தேன் என்றால் அந்த விசாரணை அறிக்கையினை சான்றாதாரங்களுடன் வெளியிட வேண்டும். ஆனால் இதுவரையில் அவ்வாறு எந்தவிடயமும் முன்னெடுக்கப்படாது வெறுமனே குற்றச்சாட்டுக்களே முன்வைக்கப்படுவதிலிருந்து இதுவொரு அரசியல் பின்னணியைக் கொண்டது என்பது தெளிவாகின்றது.

கேள்வி:- இந்த தேர்தலின் பின்னர் பழம்பெரும் கட்சியான சுத்திரக்கட்சியின் அடையாளம் கேள்விக்குறியாகும் ஆபத்துள்ளதே?

பதில்:- ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது பொதுஜனபெரமுனவுடன் கூட்டணியிலேயே உள்ளது. அது தனக்கென்றுள்ள தனித்துவத்தினையும் கொள்கைகளையும் விட்டுச்செல்லவில்லை. மேலும் சுதந்திரகட்சியில் இருந்தவர்களே தற்போது பொதுஜன பெரமுனவிலும் இருக்கின்றார்கள். அதனடிப்படையில் சுதந்திரக்கட்சியின் அடையாளத்தினை அழிப்பற்கு அவர்கள் முயலமாட்டார்கள். அதுமட்டுமன்றி தேர்தலின் பின்னர் சுதந்திரக்கட்சி புதிய உத்வேகம் அடைவதற்கான மக்கள் ஆணை வழங்குவர்கள். சுதந்திரக்கட்சி தனது பாரம்பரியத்துடன் அனைத்தின சமூகங்களையும் இணைத்துக்கொண்டு தொடர்ந்தும் பயணிக்கும்.

No comments:

Post a Comment