(செ.தேன்மொழி)
அரசியல் அனுபவம் அற்ற ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ எவ்வாறு நிர்வாகத்துறை செயற்பாடுகள் தொடர்பில் விளக்கம் பெற்றிருப்பார் ? என்று தாய் நாட்டுக்கான மக்கள் கட்சியின் தலைவர் ஹேமகுமார நாணயக்கார கேள்வி எழுப்பினார்.
செயற்படும் வீரர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு ஆட்சியை கைப்பற்றிய கோத்தாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் பயங்கரவாதிகளை பாதுகாப்பதும், குடும்ப ஆட்சியை பலப்படுத்துவதுமே நோக்காக கொண்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றது என்றும் ஹேமகுமார நாணயக்கார குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, கோத்தாபய, மஹிந்த, பசில் என்று தனித்தனியாக மக்கள் பிரித்து பார்த்தாலும் அவர்கள் ஒரே மரத்தில் காய்த்த காய்களே என்பதை மக்கள் நினைவிற் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு அரசியல் அறிவு இல்லை. அவர் இராணுவ வீரர் என்ற வகையில் யுத்தம் தொடர்பிலும், யுத்த ஆயுதங்கள் தொடர்பிலும் விளக்கம் இருக்கலாம். ஆனால் நிர்வாகத்துறை தொடர்பான விளக்கம் அவரிடம் இருக்க வாய்ப்பில்லை.
இந்நிலையில் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளுக்கு அவர் மீண்டும் தொழிவாய்ப்புகளை வழங்கி வருகின்றார். நிர்வாகப் பிரிவுகளில் இராணுவத்தினரை நியமிப்பதால் எந்தவித சாத்தியப்பாடும் கிடைக்கப் போவதில்லை.
தேசத்தின் மீது பற்றுள்ளவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் ராஜபக்ஷாக்கள், பயங்கரவாதிகளை அரவணைத்துக் கொண்டு செயற்பட்டு வருகின்றனர்.
முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இராணுவ வீரர்களை கொன்றதாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சில அரசியல்வாதிகளை கொலை செய்யுமாறு தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் தனக்கு உத்தரவிட்டிருந்த போதிலும், அவர்களை கொலை செய்யாமை தொடர்பில் பின்னடைந்ததாகவும் தனது தேர்தல் பிரசாரங்களில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பழிவாங்கும் எண்ணத்திலான கருத்துகளை தெரிவிப்பது எம்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள போதிலும் அவர் இவ்வாறு தெரிவித்திருப்பது சட்டவிரோதமான செயற்பாடாகும். இதனால் அவரை கைது செய்து சட்டநடவடிக்கைகள் எடுக்க முடியும்.
கருணாவை மாத்திரமல்ல விடுதலை புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவரான கே.பியையும் இவர்கள்தான் பாதுகாத்து வருகின்றார்கள். இராணுவத்தினருக்கு ஆதரவாளர்கள் என்று கூறுக்கொள்ளும் ராஜபக்ஷாக்கள் இராணுவ வீரர்களை கொலை செய்ததாக குறிப்பிட்டு பெருமை கொள்ளும் கருணாவை ஆதரித்து வருவது முறையற்ற செயற்பாடாகும்.
கிழக்கு வாழ் தமிழ், முஸ்லீம் மக்களின் வாக்குகளை தங்களால் வெற்றி கொள்ள முடியாததனால் கருணாவை தனித்து போட்டியிடுமாறு கூறிவிட்டு. வடக்கு கிழக்கு பகுதியில் இனவாத கருத்துகளை விதைத்து மீண்டும் ஒரு இனக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றார்கள் என்றார்.
No comments:
Post a Comment