(செ.தேன்மொழி)
அரசியல்வாதிகள் இனவாதத்தைத் தூண்டி தேர்தலை வெற்றி கொள்ள முயற்சிக்கும் போது, கிரிக்கட் வீரர்களே நாட்டின் ஐக்கியத்தை காப்பாற்றினர். சர்வதேச ரீதியில் நாட்டுக்கு பெருமை சேர்த்த வீரர்களை விசாரணைக்கு அழைத்து அவர்களுக்கு அரசாங்கம் அவப்பெயரை பெற்றுக் கொடுத்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் குற்றஞ்சாட்டினார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர்களான குமார சங்ககார, மஹேல ஜயவர்தன ஆகியோரே சர்வேதசத்திற்கு மத்தியில் எம்நாட்டுக்கு அபிமானத்தை பெற்றுக் கொடுத்தவர்கள். சங்ககரா போன்றோர் நாட்டிற்குள் ஐக்கியத்தையும், நல்லினக்கத்தையும் ஏற்படுத்த பெரும் பங்காற்றியவர்கள். இன்று அவர்களை அரசாங்கம் அவமானம் செய்துள்ளது.
இராணுவ வீரர்களை கொன்று குவித்தாக கூறி பெருமை கொண்ட முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் இரு மணித்தியாலம் மாத்திரம் விசாரணைகளை நடத்திவிட்டு, சங்ககாரரிடம் 9 மணித்தியாலயங்கள் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.
கருணா போன்ற நபர்களை காப்பாற்றும் அரசரங்கம், 2011 உலகக் கிண்ண கிரிக்கட் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயம் இடம்பெற்றதாக குற்றம் சுமத்திய முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் விசாரணைகளை நடத்துவதற்காக அவரது இல்லத்திற்கே பொலிஸ் விசாரணை பிரிவின் உறுப்பினர்களை அனுப்பி வைத்த இவர்கள், நாட்டிற்கு அபிமானத்தை பெற்றுக் கொடுத்த சங்ககார, மஹேலே ஆகிய வீரர்களை விசாரணை குழுவில் முன்னிலையாகுமாறு அறிவித்துள்ளனர். இது மிகவும் வருந்தத்தக்க விடயமாகும்.
விணைத்திறன்மிக்க நாட்டை கட்டியெழுப்புவதாக கூறிக்கொண்டே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சியை கைப்பற்றினார். தற்போது இடம்பெறும் செயற்பாடுகள் விணைத்திறன் மிக்கவையா? என்று ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்புகின்றேன் எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment