மஹிந்தானந்தவுக்கு எதிராகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும், கடந்த அரசாங்கத்தின் உறுப்பினர்கள் எவரும் விலக முடியாது - செஹான் சேமசிங்க - News View

About Us

About Us

Breaking

Saturday, July 4, 2020

மஹிந்தானந்தவுக்கு எதிராகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும், கடந்த அரசாங்கத்தின் உறுப்பினர்கள் எவரும் விலக முடியாது - செஹான் சேமசிங்க

(இராஜதுரை ஹஷான்)

கிரிக்கெட் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக குறிப்பிடப்படும் கருத்து தொடர்பில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிற்கு எதிராகவும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும். விசாரணை நடவடிக்கைகள் சுயாதீனமான முறையிலேயே இடம்பெறும். இந்த விவகாரம் பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு எவ்வித பாதிப்பினையும் ஏற்படுத்தாது என, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் மற்றும் மத்திய வங்கி பிணைமுறி விநியோக முறைகேடு ஆகியவற்றில் இருந்து கடந்த அரசாங்கத்தின் உறுப்பினர்கள் எவரும் விலக முடியாது.

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் ஐக்கிய மக்கள் சக்தியிலும், பிணைமுறி மோசடியுடன் தொடர்புடையவர்கள். ஐக்கிய தேசிய கட்சியிலும் உள்ளார்கள். இவர்களே மீண்டும் ஆட்சியதிகாத்தை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள்.

நல்லாட்சி அரசாங்கத்தில் நிலவிய இவ்விரு பாரதூரமான சம்பவங்களுக்கும் ஐக்கிய தேசிய கட்சியினரும், ஐக்கிய மக்கள் சக்தியினரும் பொறுப்பு கூற வேண்டும். கட்சி இரண்டாக பிளவுப்பட்டுள்ளது என்ற காரணத்தினால் பொறுப்பு கூறலில் இருந்து எத்தரப்பினரும் விலக முடியாது. எவ்வித சலுகைகளுமின்றி தற்போது விசாரணை நவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

கிரிக்கெட் ஆட்ட நிர்ணய சதி தொடர்பில் எவ்வித உறுதியான சாட்சியங்களும் கிடைக்கப் பெறாத காரணத்தினால் விசாரணை நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஆகவே, ஆட்ட நிர்ணய சூது இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமவிற்கு எதிராகவும் விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அரசாங்கம் ஒருபோதும் அரசியல்வாதிகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்காது. சுயாதீனமான முறையில் விசாரணை நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

கடந்த அரசாங்கம் அரசியல் பழிவாங்களுக்காக நீதித்துறை கட்டமைப்பினை பயன்படுத்தியது. பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டார்கள். கடந்த அரசாங்கத்தை போன்று முறையற்ற விதத்தில் செயற்பட வேண்டிய தேவை எமக்கு கிடையாது என்றார்.

No comments:

Post a Comment