கடந்த கால தவறுகளை மறந்து முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும் - தேசியப்பட்டியல் வேட்பாளர் மர்ஜான் பளீல் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 24, 2020

கடந்த கால தவறுகளை மறந்து முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும் - தேசியப்பட்டியல் வேட்பாளர் மர்ஜான் பளீல்

எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம்கள் கடந்த காலங்களில் விட்ட தவறுகளை மறந்து விட்டு ஆளுங்கட்சியை ஆதரிப்பதன் மூலமே தமது சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியுமென பொதுஜன பெரமுன தேசியப்பட்டியல் வேட்பாளர் மர்ஜான் பளீல் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து செவ்வாய்க்கிழமை (23) பேருவளை தொகுதி பல்வேறு இடங்களில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய மர்ஜான் பளீல், இன்று எமது சமூகம் கல்வி மற்றும் இன்னோரன்ன துறைகளில் மந்த நிலையில் பயணித்து வருவதை காணுகிறோம். இந்த நிலைக்கு உடனடி தீர்வு காண்பது காலத்தின் தேவையாகும். அதற்காக இம்முறை ஒரு சந்தர்ப்பத்தை தாருங்கள். இதற்காக எனக்கு கிடைக்கவுள்ள தேசியப்பட்டியலினூடாக பல்வேறு திட்டங்களை நான் முன்னெடுக்க தீர்மானித்துள்ளேன்.

மேலும் சக வேட்பாளர்களான பியல் நிசாந்த, ரோஹித அபேகுணவர்தன ஆகியோரின் மூலமாகவும் இப்பிரதேசத்தின் கல்வித்துறை மேம்பாட்டுக்கு சிறந்ததொரு திட்டத்தை முன்னெடுப்பேன். அதற்காக பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு கட்சி பேதங்களுக்கு அப்பால் எம்முடன் ஒன்றுசேருங்கள். கிடைக்கவுள்ள இந்த சந்தர்ப்பத்தையும் தவறவிடுவோமாயின் எமது சமூகத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்.

கடந்த காலங்களில் அரசாங்கத்திலிருந்த அரசியல்வாதிகளினால் எமது சமூகத்திற்கு என்ன கிடைத்தது என்பதை முதலில் சிந்தித்துப்பார்க்க வேண்டும். வெறுமனே எமது மக்களின் வாக்குகளை சூறையாடினார்களே தவிர எமது மக்களுக்கு உறுப்படியான எந்த சேவையும் நடைபெறவில்லை என்பதை இன்று எமது மக்கள் உணர்ந்துள்ளார்கள். எமது மக்களை ஏமாற்றியோருக்கு இந்தத் தேர்தலிலும் வாக்குகளை வழங்குவோமாயின் நாம் எமது சமூகத்திற்கு செய்யும் மன்னிக்க முடியாத துரோகமாகும்.

இந்தத் தேர்தலின் பின்பும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையிலான அரசுதான் ஆட்சியில் அமரப்போகிறது என்பதனை கருத்திற்கொண்டு எமது சமூகம் சிந்தித்து வாக்களிக்குமாயின் சமூகத்தின் தேவைகளை பெற்றுத்தர நான் ஒருபோதும் பின்னிற்கமாட்டேன்.

எமது மாவட்ட முஸ்லிம்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கிலே பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவினால் நான் தேசியப்பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளேன். எந்தளவு தூரம் கூடுதலான வாக்குகள் கிடைக்குமோ அதனை வைத்து எமது தேவைகளை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நேரடி கவனத்திற்கு கொண்டு வந்து நிவர்த்தி செய்து தருவேன் எனவும் மர்ஜான் பளீல் இதன்போது தெரிவித்தார்.

இச்சந்திப்பில் பொதுஜன பெரமுன வேட்பாளரும் முன்னாள் எம்.பியுமான பியல் நிசாந்த, முன்னாள் பேருவளை நகர பிதா மில்பர் கபூர், பிரதேச சபைத் தலைவர் மேனக விமலரட்ன, நகர சபை உப தலைவர் முனவ்வர் றபாய்தீன் உட்பட நகர, பிரதேச சபை உறுப்பினர்கள், தொழிலதிபர்களும் கலந்து சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment