கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள மாணவர்களை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக, இன்றையதினம் (03) முதல் விசேட விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பிரித்தானியாவிலும் அவுஸ்திரேலியாவிலும் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்தது.
இதற்கமைய, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்கு சொந்தமான UL 503 எனும் விசேட விமானம், இன்று (03) அதிகாலை 4.40 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து, லண்டன் ஹீத்ரோ விமான நிலையம் நோக்கி புறப்பட்டுள்ளது.
இவ்விமானத்தில் விமான சேவை பணியாளர்கள் மாத்திரம் பயணித்துள்ளனர்.
இவ்வாறு புறப்பட்டுள்ள விமானம், இன்று முற்பகல் 11.25 மணியளவில் லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை சென்றடைவதோடு, நாளை (04) அதிகாலை 12.45 மணிக்கு இவ்விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடையவுள்ளது.
இலங்கை மாணவர்கள் சுமார் 250 பேரை இவ்விமானம் ஏற்றிக்கொண்டு, வருகை தரவுள்ளது.
அத்தோடு, நாளை (04) மற்றும் நாளை மறுதினம் (05) லண்டன் நகருக்கு இன்னும் இரண்டு விமானப் பயணங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும், அவுஸ்திரேலியாவில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்காக எதிர்வரும் 08ஆம் திகதி விசேட விமானமொன்று, அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்தது.
No comments:
Post a Comment