இலங்கை நூறு வீதம் வைரஸ் தாக்கத்தில் இருந்து விடுபடவில்லை, மீண்டும் எப்போது வேண்டுமானாலும் நாம் தாக்கத்திற்கு உள்ளாகலாம் - தொற்று நோய் தடுப்பு பிரிவு - News View

About Us

About Us

Breaking

Sunday, May 24, 2020

இலங்கை நூறு வீதம் வைரஸ் தாக்கத்தில் இருந்து விடுபடவில்லை, மீண்டும் எப்போது வேண்டுமானாலும் நாம் தாக்கத்திற்கு உள்ளாகலாம் - தொற்று நோய் தடுப்பு பிரிவு

(ஆர்.யசி) 

நாட்டில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுவதால் கொவிட் -19 வைரஸ் தொற்று நோய் பரவல் இல்லையென கருதிவிட வேண்டாம். இலங்கை இன்னமும் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தில் இருந்து நூறு வீதம் விடுபடவில்லை என தொற்று நோய் தடுப்பு பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரவித்தார். வயோதிபர்கள் எக்காரணம் கொண்டும் வெளியில் நடமாட வேண்டாம் எனவும் அவர் வலியுறுத்துகின்றார். 

தொற்று நோய் பரவல் அச்சுறுத்தல் எந்தளவிற்கு விடுபட்டுள்ளது என்பதை வினவிய போதே அவர் இதனைக் கூறினார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கடந்த 25 நாட்களுக்கு அதிகமான காலம் நாட்டில் பொதுமக்கள் இடையில் கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்படவில்லை. எனவே இது ஆரோக்கியமான நிலைமையை காட்டுகின்றது. அதற்கமையவே நாட்டில் ஊரடங்கு சட்டத்தை முழுமையாக நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் ஆரோக்கியமான சூழல் உள்ளது என்பதற்காக நாட்டில் கொவிட்-19 தொற்றாளர்கள் இல்லை என அர்த்தப்படுத்த முடியாது. நாட்டில் எந்தவித அடையாளமும் காட்டப்படாது, சுகாதார அதிகாரிகளின் பரிசோதனைக்கு சிக்காத, தான் ஒரு கொவிட்-19 வைரஸ் தொற்றாளர் என்பது தெரியாது சமூகத்தில் வைரஸ் தொற்று நோயாளர்கள் இருக்க வாய்ப்புகள் உள்ளது. அவைகளும் அடையாளம் காணப்படும் வரையில் நாட்டில் வைரஸ் பரவல் அச்சுறுத்தல் இருக்கும். 

இப்போது ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டவுடன் மீண்டும் பொதுப் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும், கடைகள் திறக்கப்படும், கூட்டம் கூட்டப்படும். அவ்வாறு இருக்கையில் பழைய நிலைமைகளை மறந்துவிட்டு மக்கள் சமூக இடைவெளியை கையாளாது போனால் நிலைமை மீண்டும் மோசமடையும். ஒருவர் நோயை பரப்பினால் மீண்டும் சமூக தாக்கமாக மாற்றம் பெரும். 

எனவே மக்கள் இப்போதே சமூக இடைவெளியை கையாண்டு அடுத்த கட்ட வாழ்க்கை முறைமைக்கு பழகிக்கொள்ள வேண்டும். வயதானவர்கள் இப்போது சமூகத்தில் நடமாட வேண்டாம். அத்தியாவசிய தேவைகளை தவிர்ந்து வேறு அனாவசியமாக எக்காரணம் கொண்டும் வயோதிபர்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம். அவர்கள் வெகு விரைவாக வைரஸ் தொற்று நோய் தாக்கத்திற்கு உள்ளாவார்கள் என்பதை மீண்டும் மீண்டும் அறிவிக்கிறோம். 

அதுமட்டுமல்லாது உலகில் எந்த மூலையிலேனும் ஒரு கொவிட்-19 நோயாளர் இருப்பாராக இருந்தாலும் அவரின் மூலமாக மீண்டும் முழு உலகையுமே வைரஸ் தாக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம். இலங்கை நூறு வீதம் வைரஸ் தாக்கத்தில் இருந்து விடுபடவில்லை. மீண்டும் எப்போது வேண்டுமானாலும் நாம் கொவிட் -19 தாக்கத்திற்கு உள்ளாகலாம் என்றார்.

No comments:

Post a Comment