இலங்கையின் முன்னேற்றத்தில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் சான்றிதழே கிடைத்து விட்டது - வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை மீண்டும் அழைத்து வருவதற்கான வேலைத்திட்டம் - News View

About Us

About Us

Breaking

Sunday, May 24, 2020

இலங்கையின் முன்னேற்றத்தில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் சான்றிதழே கிடைத்து விட்டது - வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை மீண்டும் அழைத்து வருவதற்கான வேலைத்திட்டம்

(ஆர்.யசி) 

கொவிட்-19 வைரஸ் தொற்று நோய் பரவலை கட்டுப்படுத்துவதில் இலங்கை முன்னிலையில் உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் சான்றிதழ் தமக்கு கிடைத்திருப்பதாகவும் ஆகவே இலங்கையில் சுகாதாரமான சூழல் நிலவுவதாகவும், வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களை பாதுகாக்க அரசாங்கம் எப்போதும் பணியாற்றும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

அரச தகவல் திணைக்களத்தில் இன்று (24) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனைக் கூறினார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், கொவிட்-19 வைரஸ் பரவலை அடுத்து வெளிநாடுகளில் பணிபுரியும் எமது நாட்டவர்கள் தாம் படும் கஷ்டங்களை காணொளிகள் மூலமாக வெளிப்படுத்தி வருகின்றனர். இங்கு பல ஊடகங்களும் அவற்றை செய்தியாக வெளியிட்டும் வருகின்றனர். 

அரசாங்கமும் ஜனாதிபதி, பிரதமரும் அரசாங்கதினால் செய்யக்கூடிய அதிக உச்ச வேலைத்திட்டம் என்னவோ அதனை எமது மக்களுக்காக முன்னெடுப்போம். இதுவரை 26 இலட்சம் இலங்கையர்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றனர். அவர்களில் 15 இலட்சதிற்கும் அதிகமான பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் மிக அதிகமான பணத்தை இலங்கைக்கு அனுப்புகின்றனர். 

அதேபோல் கல்வி மற்றும் குறுகிய கால தேவைகளுக்காக சென்றவர்களும் உள்ளனர். 143 நாடுகளில் இவ்வாறு எமது இலங்கையர்கள் உள்ளனர். அவர்களை பாதுகாக்க நாம் சகல தூதரகங்களுடனும் பேசியுள்ளோம். 

இந்நிலையில் வெளிநாடுகளில் உள்ளவர்களில் 41 ஆயிரம் பேர் இலங்கைக்கு வருவதற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களை இலங்கைக்கு வரவழைக்கும் வேலைத்திட்டத்தை வெளிவிவகாரத்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகின்றது. 

இதில் மாணவர்களுக்கு முதலிடம் கொடுக்கப்பட்டது, அடுத்ததாக அரச ஊழியர்கள், இராணுவ, மற்றும் கற்கைக்காக சென்ற அரச ஊழியர்கள், அதற்கு பின்னர் குறுகிய கால வீசா காலத்தை கொண்டவர்களை, நோயாளர்கள் மருத்தவ தேவைகளுக்காக சென்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகின்றது. 

இவர்கள் நாட்டுக்கு வரவழைக்கப்பட்டவுடன் அவர்களை தனிமைப்படுத்தல் முறைமைக்கு உற்படுத்தப்பட்டு அவர்களின் உடல் நிலைமை குறித்து ஆராயப்படும். இராணுவமே இதனை முன்னெடுக்கின்றது. எவ்வாறு இருப்பினும் அரசாங்கமாக எம்மாலான சகல நடவடிகையையும் முன்னெடுத்து வருகின்றோம். 

இலங்கை மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாம் தனிமைப்படுத்தல் முகாம்களை அதிகரித்து பரிசோதனைகளை முன்னெடுத்து வருகின்றோம். எவ்வாறு இருப்பினும் இலங்கையில் தொற்று நோய் தடுப்பு செயற்பாடுகள் மிகவும் உயரிய மட்டத்தில் உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் ஏற்றுக்கொண்டுள்ளது. 

அவர்களின் சன்றிதலே கிடைத்த பின்னர் நாம் ஏன் அச்சம் கொள்ள வேண்டும். எனவே நாம் மிக ஆரோக்கியமான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் என்பதில் சந்தேகம் இல்லை என்றார்.

No comments:

Post a Comment