எஸ்.எம்.எம்.முர்ஷித்
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டமையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், மக்கள் நன்மைகருதி சேவை செய்யும் நோக்கில் ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு, பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் விசேட ஒன்றுகூடல் இடம்பெற்றது.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜுத் தலைமையில் நடைபெற்ற ஒன்றுகூடலில், உதவிப்பிரதேச செயலாளர் ஏ.சி.அப்கர், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி திருமதி.எஸ்.எஸ்.எம்.வசீம், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி, ஓட்டமாவடி பிரதேச சபை பிரதித்தவிசாளர் யூ.எல்.அஹமட் லெப்பை, பிரதேச சபைச்செயலாளர் எஸ்.சிஹாப்தீன், ஓட்டமாவடி வர்த்தக சங்கத்தினர் எனப்பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது தம்புள்ளை பகுதிக்கு மரக்கறிகள் கொள்வனவு செய்வதற்கு சகல மாவட்டங்களிலும் இருந்து வியாபாரிகள் வருகை தருவதால், கொரோனா வைரஸ் தொற்றக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதால், எவரும் மரக்கறிகள் கொள்வனவு செய்ய வேண்டாமெனவும், வேறெந்த மாவட்டங்களுக்கும் சென்று மரக்கறிகள் கொள்வனவு செய்யலாமென்றும் தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு, வெதுப்பக உரிமையாளர்கள், பல்பொருள் உரிமையாளர்கள் மக்களின் நலன்கருதி பொருட்களை வாகனங்களின் மூலம் நடமாடும் வியாபார நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு உரிமையாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.
ஓட்டமாவடி பிரதேச சபையினால் வியாபார அனுமதி பெற்றவர்களுக்கு மாத்திரம் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதியில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்படுமென்று விசேட ஒன்றுகூடலில் தெரிவிக்கப்பட்டது.
ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச்செல்லும் மீனவர்கள் மீன்களைப் பிடித்து வந்து அதனை விற்பனை செய்வதில் மிகவும் கஸ்டப்படுவதால், மீனவர்கள் மீன்பிடித்தொழிலினை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக மீனவர்கள் சங்கத்தினர் தெரிவித்திருந்ததாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜுத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment