பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவனின் மூளையில் இரத்த கசிவு - இயந்திரத்தின் உதவியுடன், செயற்கை சுவாசம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 11, 2020

பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவனின் மூளையில் இரத்த கசிவு - இயந்திரத்தின் உதவியுடன், செயற்கை சுவாசம்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவரை கடுமையான பகிடிவதைக்குள்ளாக்கிய பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட ஐந்து பேர் நேற்று மாலை கைது செய்யப்பட்டிருப்பதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற இரவு களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களைத் தொடர்ந்தும் விசாரணைக்குட்படுத்தியே, இவர்களை கைது செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பகிடிவதைக்கு உள்ளான மாணவன் மீது டயரை தூக்கி எறிந்த மாணவன் உள்ளிட்ட அதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களையே கைது செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பல்கலைக்கழக மாணவர்களும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவரென்றும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கடந்த 06 ஆம் திகதியன்று சிரேஷ்ட மாணவர்களின் ஏற்பாட்டில் இரவுக் களியாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதில் கலந்துகொண்ட முதலாம் ஆண்டு மாணவனான பசிந்து ஹிருஷான் (20) சிரேஷ்ட மாணவர்களால் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இதன்போது பசிந்து ஹிருஷான் மீது பாரிய டயர் ஒன்று தூக்கி எறியப்பட்டுள்ளது.

டயர் தலையில் பட்டதன் காரணமாக பசிந்து ஹிருஷானின் மூளையில் சிதைவு ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிருக்காக போராடி வருவதாகவும் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

மாணவன் மீது எறியப்பட்டுள்ள டயர் ட்ரக் வண்டியினுடையதா? அல்லது பஸ் வண்டியினுடையதா? அல்லது காருக்கு பயன்படுத்தப்படுவதா? என்பது தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் ஆராய்ந்து வருகின்றனர்.

அன்றையதினம் இரவு நடைபெற்ற களியாட்ட நிகழ்வில் சுமார் 100 தொடக்கம் 150 மாணவர்கள் வரை கலந்து கொண்டுள்ளனர். அதில் சில மாணவர்கள் மது அருந்தியிருந்ததாகவும் இச்சம்பவம் அதிகாலை 1.15 மணிக்கும் 1.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலே இடம்பெற்றிருக்க வேண்டுமென்றும் பதில் உபவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சுதந்த லியனகே தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மாணவன் சம்பவம் இடம்பெற்ற தினம் முதல் இயந்திரத்தின் உதவியிலேயே வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகின்றது. 

இம்மாணவரை உலகின் எப்பகுதிக்காயினும் அனுப்பி குணப்படுத்துவதற்கான செலவீனங்களை பல்கலைக்கழகம் பொறுப்பெற்க தயாராக இருப்பதாகவும் பதில் உபவேந்தர் தெரிவித்துள்ளார்.

மாணவனை வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்ட உயர் கல்வியமைச்சர் பந்துல குணவர்தன, பகிடிவதைக்கு எதிரான கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளதுடன் இச்சம்பவத்துக்கு காரணமான மாணவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.

லக்ஷ்மி பரசுராமன்

No comments:

Post a Comment