(ஆர்.விதுஷா)
அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாவதிலிருந்து மீள்வதற்கும், ராஜபக்ஷ தரப்பினரின் குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவும் கொண்டுவரப்பட்ட மாற்றத்தின் அணியாகவே ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி அமைந்துள்ளதாக தெரிவித்த பாட்டலி சம்பிக்க ரணவக்க பொதுத் தேர்தலின் போது மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
கம்பஹா மாவட்டத்தில் நேற்று மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி தேர்தலின் போது நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதன் காரணமாக எமக்கு வாக்களித்த அனைவரும் அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக நேரிட்டுள்ளது. எதிர்காலத்தில் எவ்வாறு இந்நிலையிலிருந்து மீள்வது என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டியது அவசியமானதாகும்.
அதிலிருந்து மீள்வதாயின் மாற்றம் ஏற்பட வேண்டும். அத்தகைய புதிய மாற்றத்திற்காகவே ஐக்கிய மக்கள் சக்தியை உருவாக்கியுள்ளோம். ஐக்கிய தேசிய கட்சியை பிளவு படுத்த இதை உருவாக்கவில்லை. புதிய தலைமைத்துவத்தில் புதிய பாதையில் பயணிப்பதை நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்டதே இந்த கூட்டணியாகும்.
அடிப்படைவாத நடவடிக்கைகள் நாட்டினுள் வலுவடைந்துள்ளதாகவும், அதனை முறியடிப்பதாகவும் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தனர். ஆயினும் அதற்குரிய எந்த நடவடிக்கைகளையும் இந்த அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.
மாறாக நாம் அரச ஊழியர்களுக்கு வழங்கிய சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு வழங்கப்பட்ட ஓய்வூதிய உயர்வு என்பனவற்றை இந்த அரசாங்கம் இரத்து செய்துள்ளது.
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததை அடுத்து எரிபொருள் விலையை குறைக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தோம். நட்டத்தில் இயங்கிய மின்சார சபையை இலாப நிலைக்கு உயர்த்தினோம்.
பல்வேறு சலுகைளை நாட்டு மக்களுக்கு வழங்கியிருந்தோம். உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளது. அதன் பயனை நாட்டு மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியாத அரசாங்கம் செல்வந்தர்களுக்கும், கசினோ சூதாட்டகார்களுக்குமான வரிச்சலுகையையே வழங்கியுள்ளது என அவர் இதன்போது தெரிவித்தார்.
No comments:
Post a Comment