கடந்த நான்கரை வருடங்களில் பாராளுமன்றத்தின் ஜனநாயகத்துக்காக தம்மால் விசேட சேவையாற்றக் கிடைத்தது என எட்டாவது பாராளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.
இலங்கை பாராளுமன்றம் முன்னுதாரணமான பாராளுமன்றமாக உலகம் முழுவதிலும் கௌரவத்தைப் பெற்றிருப்பதாக பாராளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே சபாநாயகர் இவ்வாறு குறிப்பிட்டார்.
எட்டாவது பாராளுமன்றத்தின் சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி, குழுக்களின் பிரதித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் நிகழ்வு இன்று (06) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய கரு ஜயசூரிய, சவால் மிக்க காலப் பகுதியில் பாராளுமன்றப் பணியாளர்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் ஊடாக பரந்துபட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன, அவற்றைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தலையெடுத்த இனவாத தீயைத் தணிப்பதற்கு பாராளுமன்ற குழுக்கள் சிறந்த தலைமைத்துவத்தை வழங்கியிருந்தன. சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் உள்ளிட்ட பணியாளர்கள் வழங்கிய முழுமையான ஒத்துழைப்புக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
நான் இந்தப் பதவிக்கு தூய்மையான கரங்களுடன் வந்தது போன்றே விடைபெற்றுச் செல்லும் போதும் அவ்வாறே செல்கிறேன் என நான் நம்புகிறேன். அரசியலில் பிரவேசிக்கும் அனைவரும் தூய்மையாக செயற்பட முடியுமாயின் எமது நாடு இதனை விடவும் அதிஷ்டம் மிக்கதாக மாறும்.
அதற்காக அடுத்த பாராளுமன்றத்தில் கௌரவ உறுப்பினர்கள் என அழைக்கக் கூடிய நபர்களை கொண்ட பாராளுமன்றமொன்றை காணவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.
விசேடமாக எனக்காகவேண்டி மிளகாய் தூள் தாக்குதலுக்கு உள்ளான அதிகாரிகள் ஜனநாயகம் மற்றும் பாராளுமன்றத்தின் கௌரவத்தையே பாதுகாத்தனர். நாம் குழுவொன்றாக பணியாற்றினோம். புகழ் அல்லது கௌரவமொன்று கிடைத்திருந்தால் அல்லது வெற்றி கிடைத்திருந்தால் அதன் கௌரவத்தை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் என தெரிவித்தார்.
No comments:
Post a Comment