(எம்.எப்.எம்.பஸீர்)
21.4.2019 உயிர்த்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் பிரதான குற்றவியல் விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளுக்கு ஆரம்பத்தில் பொறுப்பாக இருந்த பணிப்பாளர் உள்ளிட்ட அவ்விசாரணைகளை அப்போது முதல் முன்னெடுத்த பல அதிகாரிகளுக்கு எதிராக பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவூடாக இரு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய பதில் பொலிஸ் மா அதிபர் இதற்கான உத்தரவை எஸ்.ஐ.யூ. எனப்படும் விஷேட விசாரணைப் பிரிவுக்கு வழங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.
குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்பில் பொலிஸ் திணைக்களத்துக்கு முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் சில உண்மையாவை என தெரியவந்துள்ளதாகவும் அதனையடுத்து குறித்த அதிகாரிகளுக்கு எதிராக, சாட்சிகளை மறைத்தார்களா என்ற கோணத்திலும் பொலிஸ் அதிகாரிகளுக்கான விடயதானத்துக்கு அப்பால் செயற்பட்டனரா என்பதை உறுதி செய்ய இவ்விசாரணைகள் இடம்பெறுவதாக அவர் கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதையடுத்து, அது குறித்த விசாரணைகளுக்கு பொறுப்பாக அப்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவால், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன நியமிக்கப்பட்டார்.
அவரின் கீழ் ஒருங்கமைத்த இரு பிரதான அதிகாரிகள் முன்னாள் சி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகரவும், சி.ரி.ஐ.டி. முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜயசிங்கவும் ஆவர்.
ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவி ஏற்று சில நாட்களிலேயே சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஷானி அபேசேகர சி.ஐ.டி.யிலிருந்து மாற்றப்பட்ட நிலையில், தற்போது அவர் பொலிஸ் திணைக்களத்தின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜயசிங்க, பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவிலிருந்து பொலிஸ் ஒழுக்காற்று பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதனைவிட, அவர்களின் கீழ் விசாரணைகளை முன்னெடுத்த சி.ஐ.டி.யின் உதவி பொலிஸ் அத்தியட்சர்கள், பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் பலருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே தற்போது அவர்களில் பலருக்கும் எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment