சிறைக் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய யோசனைகள் உள்ளடக்கிய கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, March 29, 2020

சிறைக் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய யோசனைகள் உள்ளடக்கிய கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு

(நா.தனுஜா) 

நாடளாவிய ரீதியில் கொவிட் - 19 கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக பாரிய நெருக்கடியொன்று ஏற்பட்டிருக்கும் நிலையில், சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த யோசனைகளை உள்ளடக்கிய கடிதடிமொன்றை 11 சிவில் சமூக அமைப்புக்களும், 64 சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் இணைந்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். 

சமத்துவம் மற்றும் நீதிக்கான நிலையம், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பு, போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பு உள்ளிட்ட 11 சிவில் சமூக அமைப்புக்களும் அமாலினி டி சேய்ரா, பவானி பொன்சேகா, ஜெஹான் குணதிலக, அம்பிகா சற்குணநாதன், பாக்கியசோதி சரவணமுத்து, சந்தியா எக்னெலிகொட உள்ளிட்ட 64 சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் கையெழுத்திட்டிருக்கும் அந்தக் கடிதத்தின் பிரதிகள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் டி.எம்.ஜே.டபிள்யூ.தென்னக்கோன், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் காலிந்த இந்ததிஸ்ஸ, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடகம, சட்டமா அதிபர் தப்புல டி லிவெரா உள்ளிட்டோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் சுட்டிக்காட்டிப்பட்டிருக்கும் முக்கிய விடயங்கள் வருமாறு, போதிய தனிநபர் துப்பரவு, சுகாதார வசதிகளின்றி, அளவுக்கதிகமான கைதிகளுடன் சிறைச்சாலைகள் நெரிசல் மிக்கவையாகக் காணப்படுவதனால் சிறைக் கைதிகளுக்கு கொவிட் - 19 கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

மேலும் இத்தகைய காரணங்களினால் வைரஸ் தொற்றைத் தடுப்பதற்காக நபர்களுக்கிடையில் போதியளவு இடைவெளியைப் பேணுதல், அடிக்கடி கைகளை சவர்க்காரமிட்டுக் கழுவுதல் போன்றவற்றை கைதிகளால் செய்ய முடியாத நிலையும் ஏற்படும்.

இத்தொற்று நோய் குறித்த அச்சம் நாடளாவிய ரீதியிலுள்ள பல சிறைச்சாலைகளில் அமைதியின்மை ஏற்படுவதற்குக் காரணமாகியிருப்பதுடன், அநுராதபுரம் சிறைச்சாலையில் துப்பாக்கிச் சூட்டினால் மரணங்கள் ஏற்படுவதற்கும் வழிவகுத்திருக்கிறது.

எனவே கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் தொடர்பில் சிறைக் கைதிகள் மற்றும் பணியாளர்கள் மத்தியில் காணப்படும் அச்சத்தை இல்லாமல் செய்வதற்கும், சிறைச்சாலைகளின் நெரிசலைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதும் அவசியமானதாகும்.

இலங்கையின் கைதிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் விளக்கமறியல் கைதிகளாவர். மேலும் குற்றத் தீர்ப்பளிக்கப்பட்ட கைதிகளில் பெரும்பான்மையானோர் தமது அபராதத் தொகையினைச் செலுத்தத் தவறியவர்களாகவே இருக்கின்றனர்.

அதேபோன்று சிறிய மற்றும் பிணை வழங்கக் கூடிய குற்றங்களுக்குப் பிணை வழங்க மறுப்பதும், பிணைக்கான நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யத் தவறுகின்றமையும், வழக்கு விசாரணைகளை ஆரம்பிப்பதிலும் நிறைவு செய்வதிலும் காண்பிக்கப்படும் தாமதம் ஆகியவையே சிறைச்சாலைகள் நெரிசல் மிக்கவையாக மாறுவதற்கான காரணங்கள் ஆகும். இவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கு சிறைச்சாலைகளின் நெரிசலைக் குறைப்பதற்காக சிறைக் கைதிகளை விடுவிக்குமாறு உரிய சட்ட வரையறைகளைச் சுட்டிக்காட்டி, சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பினால் ஏற்கனவே விடுக்கப்பட்ட வேண்டுகோளைப் பரிசீலிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும் சிறையில் இருப்பவர்களில் கடுமையான நோய்களினால் அல்லது மரணத்தை ஏற்படுத்தக் கூடிய நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் தமது தாய்மாருடன் இருக்கும் பிள்ளைகளின் தொற்றுப்பாதிப்பு நிலை குறித்தும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்று அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய இயலாமையினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவித்தல், சிறிய மற்றும் பிணை வழங்கக்கூடிய குற்றங்களுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்குப் பிணை வழங்கல் மற்றும் தற்போதைய நெருக்கடி நிலையினைத் தொடர்ந்து நீதிமன்றப் பணிகளில் ஏற்பட்டுள்ள தடை காரணமாகத் தமது வழக்குகள் பிற்போடப்பட்டுள்ளமையால் பிணை கோர முடியாதவர்களைப் பிணையில் விடுதலை செய்தல் ஆகிய பரிந்துரைகளும் கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment