மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கு அமைய முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்ய பிடியாணை உத்தரவு - News View

About Us

About Us

Breaking

Friday, March 6, 2020

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கு அமைய முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்ய பிடியாணை உத்தரவு

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணைகளுக்கு அமைய, முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 10 பேரை கைது செய்ய பிடியாணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றினால் இன்று குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

வழக்கின் முதலாவது சந்தேகநபராக பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் பெயரிடப்பட்டுள்ளது. இந்த வழக்கின் 10 ஆவது சந்தேகநபரான புத்திக சரத்சந்திரவிற்கு எதிராக வழக்கை முன்னெடுத்து செல்வதற்கு போதிய சாட்சிகள் இன்மையால், அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன், பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ், அந்நிறுவனத்தின் பிரதான நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன உள்ளிட்ட 10 பேரை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் 12 பேரை கைது செய்வதற்கான பிடியாணையை பெறுமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு சட்ட மா அதிபர் கடந்த செவ்வாய்க்கிழமை (03) விடுத்த பணிப்புரைக்கமைய, பொலிஸார் நீதிமன்றில் விடுத்த கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் இவ்வுத்தரவை வழங்கியுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் நேற்றுமுன்தினம் (04) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் குறித்த சந்தேகநபர்கள் வெளிநாடு செல்வது தொடர்பில் தடையுத்தரவு வழங்கப்பட்டிருந்ததோடு, பிடியாணை தொடர்பில் இன்று உத்தரவு வழங்கப்படும் எனவும் நீதிமன்றம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த சந்தேகநபர்கள் மீது பிணை முறி கொடுக்கல் வாங்கலில் சதி செய்தமை, குற்றவியல் முறைகேடு, மோசடி மற்றும் தமக்கேற்றாற்போல் சந்தையில் ஆதிக்கம் செலுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment