கொரோன வைரஸை தடுப்பதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சி, டெங்கு நோயை கட்டுப்படுத்த எடுப்பதாக தெரியவில்லை : வட மத்திய மாகாண ஆளுநர் - News View

About Us

About Us

Breaking

Monday, February 3, 2020

கொரோன வைரஸை தடுப்பதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சி, டெங்கு நோயை கட்டுப்படுத்த எடுப்பதாக தெரியவில்லை : வட மத்திய மாகாண ஆளுநர்

(எம்.ஆர்.எம்.வஸீம்) 

நாட்டுக்கு இதுவரை பாதிப்பு ஏற்படாத கொரோன வைரஸை தடுப்பதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சி, டெங்கு நோயை கட்டுப்படுத்த எடுப்பதாக தெரியவில்லையென லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் வட மத்திய மாகாண ஆளுநருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார். 

அதனால் அரசாங்கம் இதற்காக செலவிடும் நிதி தேவையற்றதாகும். அத்துடன் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் சீனாவுடன் இருக்கும் உறவும் பாதிக்கப்படும் அபாயம் இருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார். 

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், சீனாவில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை 12ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வைரஸ் தாக்கத்துக்கு ஆளாகி இருக்கின்றனர். 300 பேரளவில் மரணித்திருக்கின்றனர். இது 3 வீதத்துக்கும் குறைவான மரண வீதமாகும். 

ஆனால் 2003 ஆம் ஆண்டு ஹொங்கொங் மற்றும் அதனை அண்டிய பிராந்தியங்களில் ஏற்பட்ட மார்ஸ் வைரஸ் நோயினால் 10 வீதமானவர்கள் மரணித்தனர். அதனைத்தொடர்ந்து மத்திய கிழக்கு பிரதேசங்களில் ஏற்பட்ட மேர்க்ஸ் வைரஸ் நோயினால் 30 வீதமானவர்கள் மரணித்தனர். அவ்வாறான நிலைமைகளின்போது நாங்கள் வைரஸ் தொற்று ஏற்டாமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். 

அத்துடன் கடந்த 3 மாதங்களில் இன்புழுவன்சா ஏ, வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 53 பேர் மரணித்துள்ளனர். ஒவ்வொரு வருடமும் குளிர்காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்த வைரஸ் வருகின்றது. இது தொடர்பில் நாட்டுக்குள் பெரிதாக யாரும் அலட்டிக்கொள்வதில்லை. அதேபோன்று ஜனவரி மாதம் மாத்திரம் 8 ஆயிரம் பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் மரணித்துள்ளனர். 

ஆனால் கெரோனா தொடர்பில் எமது நாட்டுக்கு எந்த எச்சரிக்கையும் இதுவரை ஏற்படவிலலை. அப்படி இருந்தும் மக்கள் மத்தியில் பாரிய அச்சம் ஏற்பட்டிருக்கின்றது. அரசாங்கமும் இந்த வைரஸை கட்டுப்படுத்த பாரியளவில் செலவழித்து வருகின்றது. 

அத்துடன் அரசாங்கம் இந்த வைரஸை கட்டுப்படுத்த விஞ்ஞான ரீதியில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கின்றதா என்பதில் திருப்தியடைய முடியாமல் இருக்கின்றது என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment