இந்தியா, தமிழகத்தில் தான் பெற்ற மகனையே கொலை செய்து பல துண்டுகளாக வெட்டி ஆங்காங்கே வீசிய தாய் மற்றும் சகோதரனின் செயல் அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
யானைக் கெஜம் பகுதியில் ஒரு சாக்குப்பையில் தலை, கை, கால்கள் இல்லாமல் வெறும் உடல் பகுதி மட்டும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலையில்லாத அவ்வுடலைக் கைப்பற்றிய பொலிஸார், பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரச வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
சுருளிப்பட்டி சாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இரவு நேரத்தில் சைக்கிளில் சென்ற பெண் உட்பட்ட ஆணொருவரை பார்த்து அவர்கள் பயணித்த சைக்கிளின் பதிவு எண்ணை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
விசாரணையில், கம்பத்தைச் சேர்ந்த 49 வயது செல்வியும், அவரது 25 வயது மகன் ஜெயபாரத்தும் இரவில் மூட்டையுடன் சென்றதை பொலிஸார் கண்டுபிடித்தனர். வீட்டில் இயல்பாக இருந்த இருவரையும் விசாரணைக்கு அழைத்துவந்த தனிப்படையினரிடம் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
30 வயதான மூத்த மகன் விக்னேஷ்வரனைக் கொலை செய்து, துண்டு துண்டாக வெட்டி வீசியதாக தாய் செல்வி, சகோதரர் ஜெயபாரத் கொடுத்த வாக்குமூலம் பொலிஸாரை அதிர வைத்துள்ளது. அவர்களின் வாக்குமூலத்தின்படி, தனித்தனியாக வெட்டி வீசப்பட்ட உடல் பாகங்களை, தீயணைப்பு துறையினரின் உதவியுடன் போலீசார் மீட்டனர்.
கம்பம் மின்சார அலுவலகத்தின் பின்புறம் உள்ள புளியந்தோப்பு புதரிலிருந்து இரண்டு கை, கால்களை பொலிஸார் மீட்டனர். அதேபோல், கம்பம் வீரநாயக்கன் குளத்தில் உள்ள தனியார் தோட்டத்தின் கிணற்றில் வீசப்பட்ட தலையை பொலிஸார், 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.
மேற்படி சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, படித்துவிட்டு, வேலைக்குச் செல்லாமல் மூத்த மகன் விக்னேஷ்வரன் குடிக்கு அடிமையாகியுள்ளார். குடித்துவிட்டு, அவ்வப்போது தாயென்றும் பாராமல், எல்லை மீறி கெட்ட வார்த்தைகளில் திட்டித் தீர்ப்பதும், அடித்து துன்புறுத்துவதும் என குடும்பத்திற்கு பாரமாக விக்னேஷ்வரன் மாறியுள்ளார்.
விக்னேஷ்வரன் போதைப் பொருட்களை அதிகம் பயன்படுத்த தொடங்கியதால், சண்டை உச்சமடைந்ததாக கூறப்படுகிறது மூத்த மகன் குடும்பத்தை கவனிக்காமல் சுற்றிவந்த நிலையில், குடும்பத்தை கவனித்துவந்த இளைய மகன் ஜெயபாரத், தான் காதலித்த பெண்ணைக் கடந்த வாரம் தான் திருமணம் செய்தார்.
இந்நிலையில், தினமும் வீட்டுக்கு வந்து விக்னேஷ்வரன் செய்யும் கொடுமை தாங்க முடியாததால், அவரை கொலை செய்ய தாயும், சகோதரரும் திட்டமிட்டனர். போதையில் வீட்டுக்கு வந்த விக்னேஷ்வரனை கட்டையால் தாக்கி கொன்ற தாயும் மகனும், உடலை தடயமின்றி அழிப்பது எப்படி என்று யோசித்துள்ளனர்.
திகில் திரைப்படங்களில் வருவதுபோல், உடலை துண்டு துண்டாக வெட்டி, வெவ்வேறு இடங்களில் வீசினால், எளிதில் கண்டு பிடிக்க முடியாது என திட்டமிட்டனர்.
வீட்டில் இருந்த கத்தி, அரிவாள், கோடரி ஆகியவற்றால் விக்னேஷ்வரனின் உடலை கை, கால், தலை, உடல் என பல பாகங்களாக வெட்டியுள்ளனர். வெட்டிய பாகங்களை சாக்குகளில் சுற்றி, கிணறு, புதர், ஆறு என பல இடங்களில் ரகசியமாக வீசியுள்ளனர்.
கடைசியாக சுருளிப்பட்டி அருகே உடல் பகுதியை வீசப்போன போது சிசிடிவியில் பதிவான காட்சியால், தாயும், மகனும் போலீசில் சிக்கியுள்ளனர்.
பொறியியல் படித்துவிட்டு, தந்தையில்லாத குடும்பத்திற்கு உதவியாக இல்லாமல், பெரும் தொல்லையாக இருந்த மகனைக் குடும்பமே கொன்று, வெட்டி வீசிய சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
No comments:
Post a Comment