ஆலோசனைகளை கவனத்தில் கொண்டு செயற்பட்டமையினால் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தக் கூடியதாக இருந்தது : அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Monday, February 3, 2020

ஆலோசனைகளை கவனத்தில் கொண்டு செயற்பட்டமையினால் வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தக் கூடியதாக இருந்தது : அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்

(ஆர்.விதுஷா) 

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஆலோசனைகளையும் கவனத்தில் கொண்டு செயற்பட்டமையின் விளைவாக இந்த வைரஸ் நாடு முழுவதும் பரவுவதை கட்டுப்படுத்தக் கூடியதாக இருந்ததாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கேயினால் இன்று வெளியிடப்பட்டிருந்த அறிக்கையிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கொரோனா வைரசின் தாக்கம் உலகளாவிய ரீதியில் அதிகரித்துள்ளது. 

இந்நிலையில், எமது நாட்டினுள் இந்த வைரஸ் தாக்கம் ஏற்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சில ஆலோசனைகளை முன்வைத்திருந்தது. அந்த ஆலோசனைகளை உரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு செயற்படுத்தியுள்ளனர். அதன் ஊடாக இந்த வைரஸ் தாக்கம் நாட்டினுள் ஏற்படுவதை கட்டுப்படுத்தக் கூடியதாகவுள்ளது. 

சுகாதர துறை மாத்திரமல்லாது பாதுகாப்பு துறையினரும் இந்த வைரஸ் நாட்டினுள் பரவுவதை கட்டுப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவையாகும். 

சீனாவின் வுஹான் நகரிலிருந்து எமது சகோதர சகோதரிகளை அழைத்து வருவதற்கு அனைத்து தரப்பினரும் பாடுபட்டுளைத்துள்ளனர். சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கு அமைய விமான சேவைகள் அதிகாரிகள் செயற்பட்டமை சிறந்த விடயமாகும். 

கொரோனா வைரஸ் சீனாவில் பல பிரதேசங்களுக்கு பரவியுள்ளது. அந்த வகையில் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளானவர்கள் 16000 பேர் வரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் 400 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். 

அத்துடன், சீனா தவிர்த்த நாடான பிலிப்பைஸ்சில் நேற்று கொரோனா வைரசினால் ஏற்பட்ட முதல் மரணம் பதிவானது. உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் பிரகாரம் இவ்வாறாக கூறப்படினும், இதன் பாதிப்பு அதிகம் எனவும் சீனா இந்த வைரஸ் தாக்கம் தொடர்பிலான உண்மை தகவல்களை வெளியிடாது மறைப்பதாகவும், அந்த நாடு குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ளது. 

அந்நாட்டு தொற்று நோய் ஆய்வு பிரிவின் கருத்தின் படி கடந்த காலங்களில் இவ்வாறான நோய் தொற்றுக்களை கட்டுப்படுத்தக் கூடியதாகவிருந்ததை விடவும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவது கடினம் என அனுமானித்துள்ளனர். 

இந்நிலையில், இந்த வைரஸ் தாக்கத்தை எம்மால் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க கூடியதாகவிருப்பது திருப்திகரமாகவுள்ளது. அந்த வகையில், எமது சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் உபயோகமானதாகவிருக்கும் என மீண்டும் நினைவுபடுத்த விரும்புகின்றோம். 

அந்த வகையில் அங்கொடை வைத்தியசாலையை போன்றதான தொழில்நுட்ப வசதிகளை இந்த வைரஸ் தொற்று தொடர்பில் கண்டறிவதற்காக அனுமதியளிக்கப்பட்ட வைத்தியசாலைகளுக்கும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டியமை அவசியமானதாகும். 

அதேபோல் வெளிநாட்டவர்கள் நாட்டிற்கு வரும் பண்டாரநாயக்க விமான நிலையம் துறைமுகங்கள் உட்பட ஏனைய வழிகளிலும் முறையான கணிகாணிப்பு நடவடிக்கைகனை மேற்கொள்ள வேண்டும். 

ஏனெனில் இது வரையில் முன்னெடுக்கப்படும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் குறைபாடுகள் காணப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆகவே, இத்தகைய விடயங்களிலும் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டியமை அவசியமானதாகும். 

அத்துடன், கொரோனா வைரஸ் தொடர்பில் அவதானம் செலுத்துவதை போன்று டெங்கு எலிக்காச்சல் உள்ளிட்ட நோய் நிலைமைகள் தொடர்பிலும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமானதாகும். 

அவ்விடயத்தில் கவனம் செலுத்த தவறும் பட்சத்தில் ஏனைய பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும். இந்த விடயங்கள் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

அத்துடன், சங்கம் என்ற வகையில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கு நாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளோம்.

No comments:

Post a Comment