(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுடன் இணைந்து தன்னால் செயற்பட முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிடுவது நகைப்பிற்குரியன. பொதுத் தேர்தலை தொடர்ந்து மஹிந்த ராஜபக்ஷவே பிரதமர் பதவி வகிப்பார் என்பதை பெரும்பாலான மக்கள் தீர்மானித்து விட்டார்கள் என பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜி. எல். பீறிஸ் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்படத் தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிடுவது நகைப்பிற்குரியன. பொதுத் தேர்லில் ஐக்கிய தேசிய கட்சியால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது.
நாட்டு மக்கள் 2015 ஆம் ஆண்டு அரசியல் ரீதியில் எடுத்த தவறான தீர்மானத்தை 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் முதற்கட்டமாக திருத்திக் கொண்டுள்ளார்கள். இதன் தன்மையே இடம் பெறவுள்ள பொதுத் தேர்தலிலும் கிடைக்கப்பெறும்.
ஜனாதிபதியின் கொள்கைக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் கொள்கைக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைகளை மக்கள் வெறுத்தமையினால்தான் ஜனாதிபதித் தேர்தலில் புறக்கணித்தார்கள். முரண்பாடான இரு தரப்பு கொள்கையினையும் கொண்டு சிறந்த அரசாங்கத்தை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது.
ஜனாதிபதியும், பிரதமரும் ஒருமித்த கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு செயற்பட வேண்டும் இல்லாவிடின் பலவீனமான அரசாங்கமே தோற்றம் பெறும் என்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரது நல்லாட்சி அரசாங்கம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இரு பிரதான அரசியல் தலைவர்களுக்கும் இடையில் காணப்பட்ட தனிப்பட்ட மற்றும் அரசியல் முரண்பாடுகளே பல பாரதூரமான பிரச்சினைகளுக்கு பிரதான காரணியாக அமைந்தன.
பொதுத் தேர்தலை தொடர்ந்து பிரதமர் பதவி வகிப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குறிப்பிடுவது ஒருபோதும் நிறைவேறாது. தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே பொதுத் தேர்தலின் பின்னரும் பிரதமராக பதவி வகிப்பார் என்பதை பெரும்பாலான மக்கள் தீர்மானித்து விட்டார்கள் என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment