புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் சர்வதேச நிபுணர் குழு சீனாவில் ஆய்வு - News View

Breaking

Post Top Ad

Monday, February 17, 2020

புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் சர்வதேச நிபுணர் குழு சீனாவில் ஆய்வு

உலக சுகாதார அமைப்பின் சர்வதேச நிபுணர் குழு, புதிய கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான கலந்துரையாடல்களை சீனாவில் ஆரம்பித்துள்ளது.

சீனாவில் உள்ள மருத்துவ நிபுணர்களைச் சந்தித்த குழு, வைரஸ் தொற்றின் எதிர்காலப் போக்குக் குறித்துக் கணிப்பது தற்போதைக்குச் சாத்தியமற்ற ஒன்று என குறிப்பிட்டது. 

புதிய வகை வைரஸ் பற்றி உலக நாடுகள் மேலும் அறிந்துகொள்ள வகை செய்யும் முக்கியக் கூட்டத்தின் முடிவுகளை எதிர்பார்த்திருப்பதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கூறினார்.

சீன பெருநிலத்தில் இந்த வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,775 ஆக (நேற்று) அதிகரித்துள்ளது. வைரஸின் மையப்புள்ளியாக இருக்கும் ஹுபெய் மாகாணத்தில் மேலும் 100 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஹுபெய் மாகாண தலைநகர் வூஹானில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் சீனாவெங்கும் பரவியதோடு தற்போதும் சர்வதேச அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த திங்கட்கிழமை 2,048 புதிய வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவானதாக சீனா குறிப்பிட்டுள்ளது. இந்த புதிய சம்பவங்களில் 1,933 பேர் ஹுபெய் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.

வைரஸினால் சீனாவெங்கும் மொத்தம் 70,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஹுபெயில் மாத்திரம் 58,172 பேர் பாதிக்கப்பட்டிருப்பதோடு 1,692 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக நோய் தொற்று ஏற்பட்ட பெரும்பாலான சம்பவங்கள் வூஹான் நகரிலேயே பதிவாகியுள்ளன.

இதேவேளை கொவிட்-19 என பெயரிடப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக ஜப்பான் கடற்பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் சொகுசுக் கப்பலில் இருந்த நூற்றுக்கணக்கான அமெரிக்கர்கள் இரு விமானங்கள் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இதில் ஒரு விமானம் கலிபோர்னியாவில் உள்ள விமானப்படைத் தளத்தில் தரையிறங்கியுள்ளது. இவ்வாறு அழைத்து வரப்பட்டவர்கள் இராணுவ வசதி ஒன்றில் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.

டயமன்ட் பிரின்சஸ் என்ற இந்த சொகுசுக் கப்பலில் சுமார் 400 அமெரிக்கர்கள் இருந்தனர். 3,700 ஊழியர்கள் மற்றும் பயணிகள் இந்தக் கப்பலில் இருந்ததோடு கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதி தொடக்கம் யொக்கோஹாமா கடற்பகுதியில் இந்தக் கப்பல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கப்பலில் இருந்த பேலும் 70 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக ஜப்பான் நிர்வாகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது. இதன்மூலம் மொத்தம் 355 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சீனாவுக்கு வெளியில் இந்த கப்பலில் உள்ளவர்களுக்கே அதிகம் புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் நோய் தொற்று ஏற்பட்டிருக்கும் 40 அமெரிக்க பிரஜைகளுக்கு ஜப்பானில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சீனாவுக்கு வெளியே 4 பேர் இந்த கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ், ஹொங்கொங், பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளிலேயே உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. முப்பது நாடுகளில் இந்த வைரஸ் தொற்று பரவி உள்ளது.

இந்நிலையில் வூஹான் நச்சுயிரியல் நிலையம், அதனுடன் தொடர்புடைய மாணவருக்கு முதன்முதலாக கொரோனா வைரஸ் தொற்றியது என்று பரவிவரும் தகவலை மறுத்துள்ளது.

அந்த நிலையத்தின் முன்னாள் மாணவர் ஒருவருக்கு முதன்முதலாக நோய் தொற்றியது என்ற தகவல் இணையத்தில் பரவி வருகிறது. அந்த மாணவர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே பட்டம் பெற்று வூஹான் நகரிலிருந்து கிளம்பிவிட்டதாகக் கூறப்பட்டது.

மேலும் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், வூஹான் நகருக்கு அதன் பின் அவர் திரும்பச் செல்லவில்லை என்றும் நிலையம் தெரிவித்தது.

புதிய கொரோனா வைரஸ் முதன்முதலில் எங்கு, எப்படித் தொற்றத் தொடங்கியது, யாருக்குத் தொற்றியது என்பது இதுவரை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. நோய் வனவிலங்குகளை உயிருடன் விற்கும் வூஹான் சந்தையிலிருந்து தொடங்கியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad