(எம்.மனோசித்ரா)
கொழும்பிலுள்ள சதொச விற்பனை நிலையத்தின் களஞ்சியசாலையில் 19,700 கிலோவுக்கும் அதிகமான பாவனைக்கு உதவாத அரிசி தொகை இன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்துக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய இந்த அரிசி தொகை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன, கொழும்பு சதொச அரிசி களஞ்சியசாலையில் 19,700 கிலோ அரிசி லொறிகளில் வைக்கப்பட்டுள்ளன. இவை மாளிகாவத்தைக்கு கொண்டு சென்று புதைக்கப்படவுள்ளன.
மேலும் 1000 கிலோவுக்கும் அதிக அரிசி வேறாக பொதி செய்யப்பட்டுள்ளன. பருப்பு மற்றும் சோளம் என்பனவும் இவ்வாறு வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு வைக்கப்பட்டுள்ள அரிசி விலங்குகளுக்கு கூட உண்ண கொடுக்க முடியாதவையாகும். இவை கட்டாயமாக அழிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
எனினும் இவ்வாறு சிறிதளவும் பிரயோசனப்படாமல் போகும் வரை இந்த தொகை அரிசி களஞ்சியப்படுத்தப்பட்டிருப்பது ஏன் என்பதே எமது கேள்வியாகும். எமது நாட்டில் போதியளவு அரிசி உள்ளது. எனவே வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய தேவை கிடையாது.
எமக்கு ஒரு வருடத்துக்கு 36 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி போதுமானதாக உள்ளது. எனினும் சுமார் 45 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு தேவைக்கும் அதிகமாக அரசி உற்பத்தி செய்யப்படும் போது ஏன் வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுகிறது?
இதன் மூலம் பாரிய மோசடி இடம்பெற்றுள்ளது. பொது மக்களின் பணமே இதற்காக செலவிடப்பட்டுள்ளது. எனினும் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி மக்களுக்கும் வழங்கப்படவில்லை. விலங்குகளுக்கும் வழங்கப்படவில்லை. எவ்வித தேவையும் இன்றி இவ்வாறு அரிசி இறக்குமதி செய்யப்படுவது அமைச்சர்களின் சுய நலனுக்காகவேயாகும்.
கடந்த அரசாங்கத்தாலேயே இவ்வாறு அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் தற்போதைய அரசாங்கம் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதே போன்று கடந்த 2014 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியிலும் இதேபோன்று அரிசி இறக்குமதி செய்யப்பட்டு பயன்படாமல் அழிக்கப்பட்டது. இதனுடன் தொடர்புடையவர்கள் இணங்காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடமும் அரசாங்கத்திடமும் இவ்விடயம் தொடர்பில் உரிய அவதானம் செலுத்துமாறு கோருகின்றோம். மத்திய வங்கி பிணை முறி மோசடியையும், கொரோனா வைரஸையும் கொண்டு இந்த விடயங்களை மூடி மறைக்க முயற்சிக்க வேண்டாம் என்று கோருகின்றோம் என்று கூறினார்.
No comments:
Post a Comment