ஆசிரியர்களுக்கு வீடமைப்பு திட்டங்களை ஏற்படுத்திக் கொடுக்க யோசனை - News View

About Us

About Us

Breaking

Friday, October 4, 2019

ஆசிரியர்களுக்கு வீடமைப்பு திட்டங்களை ஏற்படுத்திக் கொடுக்க யோசனை

தோட்டத் தொழிலாளர்களுக்கு தனி வீட்டுத் திட்டத்தை மேற்கொண்டு வருவது போல, ஆசிரியர்களுக்கு கிராமங்களை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற திட்டம் உள்ளது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆசிரியர்களின் வீடமைப்பு தொடர்பான கோரிக்கையை தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்க யோசனை முன்வைத்துள்ளோம் என மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி. திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

உலகத்தில் உள்ள அனைத்து சேவைகளிலும் ஆசிரிய சேவை உன்னதமான பணியாகும். தம்மிடம் கல்வி பயிலும் மாணவர்களை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்து உள்ளம் பூரிக்கும் உயரிய பண்பு ஆசிரியர்களிடத்தில் இருக்கின்றது. அவர்கள் தமது தன்னலமற்ற சேவையின் ஊடாக உயர்கின்ற அதேநேரத்தில், யாருக்கும் அடிபணியாது சுதந்திரமாகவும் நேர்மையாகவும் செயற்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ஆசிரியர் பணி என்பது இலகுவான ஒரு விடயம் அல்ல. முதலில் ஆசிரியர்கள் கற்க வேண்டும், பின்னர் தாம் கற்றவற்றை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். தம்மிடம் வரும் மாணவர்கள் அனைவரையுமே கரை சேர்க்க வேண்டிய பாரிய சமூக பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றது. அதைச் செவ்வனே செய்வதன் ஊடாக சமூகத்தில் நன்மதிப்பும், பாராட்டும் கிடைக்கின்றது.

மலையகத்தைப் பொறுத்தவரையில் எத்தனையோ பாடசாலைகள் வளப்பற்றாக்குறைகளுடன் இயங்கி வருகின்றன. அவ்வாறு வசதிகள் இல்லாத போதிலும் கூட மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று உயர் கல்வி நிறுவனங்களுக்கு செல்கின்றார்கள். 

இதுவே, அவர்களின் சேவைக்கும் சாதனைக்கும் கிடைக்கின்ற அங்கீகாரமாகும். அதைப் பெருமைப்படுத்த வேண்டியது ஒவ்வொருவரதும் கடமையாகும். ஆசிரியர்களுக்கு வீடமைப்புத் திட்டம் ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு தனி வீட்டுத் திட்டத்தை மேற்கொண்டு வருவது போல, ஆசிரியர்களுக்கு கிராமங்களை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்ற திட்டம் உள்ளது. எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆசிரியர்களின் வீடமைப்பு தொடர்பான கோரிக்கையை தேர்தல் விஞ்ஞாபனத்தில் முன்வைக்கவுள்ளோம்.

எனவே, ஆசிரியர்கள் எந்த விதமான அரசியல் அழுத்தங்களுக்கும் அஞ்சாமல் துணிவோடும், நேர்மையோடும், அர்ப்பணிப்போடும் தமது சேவையில் நிலைத்து நின்று சமூக ஒற்றுமையை மேம்படுத்த முன்வர வேண்டும். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment