ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற விவகாரத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்க விரைவில் தீர்வு காண்பார் என அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் குறித்த கேள்விக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “ஜனாதிபதி வேட்பாளர் விவகாரத்தால் ஐக்கிய தேசியக் கட்சி துண்டுதுண்டாக உடையும் என்று ராஜபக்ச அணியினரும் மைத்திரி அணியினரும் கனவு காண்கின்றார்கள். அந்தக் கனவு ஒருபோதும் நனவாகாது.
பதவி ஆசை பிடித்த தனிநபர்கள் மட்டும் எமது கட்சியிலிருந்து விலகிச் செல்லலாம். அது அவர்களின் சுயவிருப்பம். நாம் தடுக்கவேமாட்டோம். அவர்கள் அவ்வாறு செல்வதால் எமது கட்சி மூன்றாகப் பிளவுபடப்போகின்றது எனக் கனவு காண்பதை நிறுத்துமாறு எதிரணியினரிடம் நாம் வேண்டிக்கொள்கின்றோம்.
எமது கட்சியிலிருந்து தனிநபர்கள் பிரிந்து சென்றால் அவர்கள் புதிய கட்சியைத் தொடங்கும் பலத்தைக் கொண்டிருக்கமாட்டார்கள். அவ்வாறு செல்பவர்கள் மைத்திரி அணியுடன் அல்லது மஹிந்த அணியுடன்தான் கைகோர்ப்பார்கள்.
இந்த நிலையில், எமது கட்சி துண்டுதுண்டாக உடையப் போவதுமில்லை பிளவுபடப்போவதுமில்லை. துரோகிகள் வெளியேறி விட்டார்கள் என்ற மகிழ்வுடன் எமது கட்சி பலமடைந்தே தீரும். ஜனாதிபதித் தேர்தலில் தகுதியான வேட்பாளர் களமிறங்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். இதற்கு பிரதமர் விரைவில் தீர்வு காண்பார்” என்றார்.
No comments:
Post a Comment