பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீலங்கா சதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் நடைபெற்றது.
முதல் முறையாக நடைபெற்ற இச்சந்திப்பில் சு.க சார்பில் அதன் செயலாளர் தயாசிறி ஜயசேகர, பொருளாளர் லசந்த அலகியவன்ன மற்றும் ஐ.ம.சு.மு செயலாளரும் சு.க உபதலைவருமான மஹிந்த அமரவீர ஆகியோர் கலந்து கொண்டதாக அறியவருகிறது.
பொதுஜன பெரமுனவுக்கும் சுதந்திரக் கட்சிக்குமிடையில் கூட்டணி அமைப்பது தொடர்பில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து இங்கு முக்கியமாக ஆராயப்பட்டது.
ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது எதிர்கால அரசின் கொள்கைகள் என்பன பற்றியும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதாக தெரியவருகிறது.
இதேவேளை இச்சந்திப்பு குறித்து கருத்துத் தெரிவித்த ஐ.ம.சு.மு செயலாளர் மஹிந்த அமரவீர, ஸ்ரீல.சு.க - பொதுஜன பெரமுன பேச்சுக்களின் தற்போதைய நிலைமை மற்றும் கொள்கை ரீதியான விடயங்கள் பற்றி இங்கு முக்கியமாக ஆராயப்பட்டது.
இது தவிர எதிர்வரும் ஆட்சியில் அமைச்சர் தொகையை 30 ஆக மட்டுப்படுத்துவது, தேர்தல் முறையை மாற்றுவது போன்ற விடயங்கள் பற்றியும் ஆராயப்பட்டதோடு அதற்கு கொள்கை ரீதியில் உடன்பாடு எட்டப்பட்டது என்றார்.
பேச்சுவார்த்தை வெற்றியளித்ததாக கூறிய அவர் அடுத்த வாரம் மீண்டும் சந்தித்து பேச உள்ளதாகவும் கூறினார். சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பு கட்சி தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதியுடனே நடைபெற்றதாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment