அடுத்த ஜனாதிபதித் தேர்தலின்போது, யாருமே எதிர்ப்பாராத ஒரு சம்பவம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்பிலிருந்து நிகழப்போவதாக எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவநாணயக்கார தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். வாசுதேவநாணயக்கார மேலும் கூறியுள்ளதாவது, “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து அனைத்து செயற்பாடுகளும் பூர்த்தியாகிவிட்டன.
இப்போது, அதனை உத்தியோகபூர்வமாக அறிவிக்க மட்டும்தான் வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ அறிவிக்கும் வேட்பாளருக்கு நாம் முழுமையான ஆதரவினை வழங்குவோம்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனான பேச்சுவார்த்தைகளும் நடந்துகொண்டு இருக்கிறது. ஆனால், அனைத்தையும் விட முக்கியமான ஒரு சம்பவம் விரைவில் நடக்கவுள்ளது.
இது தொடர்பிலான தகவல்களை நான் துளியளவும் வெளியிடமாட்டேன். அது மிகவும் முக்கியமான ஒன்றாகத்தான் கருதப்படுகிறது. இவ்வளவு தகவல்களை மட்டும்தான் இப்போதைக்கு என்னால் வெளியிட முடியும்.
எம்மைப் பொறுத்தவரை இந்த ஜனாதிபதித் தேர்தலை நாம் சவாலான ஒரு விடயமாகவே கருதவில்லை. ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவுகள் வந்துவிட்டன. அமைச்சர் சஜித் பிரேமதாஸ இப்போதே தன்னை வேட்பாளராக அறிவித்துக்கொண்டு, பதாதைகளை வைக்க ஆரம்பித்துவிட்டார்.
எமக்கு இதனால் எவ்வித சிக்கலும் கிடையாது. நாம் யாருடைய ஆதரவையும் பெறப்போவதில்லை. நாம் வெற்றி பெற்றவுடன் பலர் எம்முடன் இணைவார்கள். ஆனால், யாருடன் இணைய வேண்டும் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment