ரயில்வே திணைக்கள முன்னாள் அதிகாரிகள் இருவருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் - News View

About Us

About Us

Breaking

Thursday, August 29, 2019

ரயில்வே திணைக்கள முன்னாள் அதிகாரிகள் இருவருக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல்

ரயில்வே திணைக்களத்தை சேர்ந்த முன்னாள் அதிகாரிகள் இருவர் மீது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நேற்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மோசடி தொடர்பான குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது. 

ரயில்வே திணைக்களத்தின் முன்னாள் பொது முகாமையாளர் விஜித பலிஹக்கார வசம் விஜேசேகர மற்றும் முன்னாள் வர்த்தக முகாமையாளர் விஜய சமரசிங்க ஆகியோர் மீதே இவ்வாறு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன. 

2010 மார்ச் 11ஆம் திகதி அல்லது அதற்கு சமீப தினத்தில் மேற்படி சந்தேக நபர்கள் ரயில்களில் உள்ள நடமாடும் உணவுச்சாலைகளை டென்டர் நடைமுறைக்கு புறம்பாக ஜிலான் டி சில்வா என்பவருக்கு சட்டவிரோதமாக வழங்கியதன் மூலம் ரயில்வே திணைக்களத்துக்கு நட்டம் ஏற்படுத்தியதாக அவர்கள் மீது இலஞ்ச ஆணைக்குழு, இலஞ்ச சட்டத்தின் 70 (a) பிரிவின் கீழ் மேற்படி குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தது. 

அத்துடன் மேற்படி சந்தேக நபர்கள் இருவரையும் தலா 50 ஆயிரம் ரூபா காசுப் பிணையிலும் 5 இலட்ச ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையிலும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க பிணையில் செல்ல அனுமதித்தார்.

வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் 8 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment