அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்திலுள்ள குறைபாடுகள் சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு தடையை ஏற்படுத்துகின்றன - ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 6, 2019

அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்திலுள்ள குறைபாடுகள் சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு தடையை ஏற்படுத்துகின்றன - ஜனாதிபதி

நாட்டின் சட்டக் கட்டமைப்பும் அரசியலமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்தில் உள்ள சில குறைபாடுகளினதும் காரணமாக சிறந்ததோர் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கு தடைகள் உருவாவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

சிறந்த அரசியல் கலாசாரமொன்றிற்காக முன்மொழியப்பட்டுள்ள பரிந்துரைகள் நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் கையளிக்கும் தேசிய நிகழ்வு இன்று (06) பிற்பகல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் சிறந்ததோர் அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவதற்கான பரிந்துரைகள் உள்ளடங்கிய முன்மொழிவொன்றினை அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களுக்கு முன்வைக்கும் நோக்குடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த முன்மொழிவுகள் மூன்று நிக்காயாக்களையும் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்களின் இணக்கப்பாட்டுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குள்ள சலுகைகளுக்கு மேலதிகமாக மேலும் சலுகைகளை பெற்றுக்கொள்ள அங்கீகாரமளிப்பதற்கு தான் உடன்படாதிருப்பது மக்களின் பணம் வகைதொகையற்ற முறையில் செலவிடப்படுவதை தான் அங்கீகரிக்காத காரணத்தினாலேயேயாகுமென்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மேலும் சங்கைக்குரிய மகாசங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களின் உடன்பாட்டுடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பரிந்துரைகள் குறித்து தானும் முழுமையான உடன்பாட்டினை தெரிவிப்பதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளும் இதற்கு இணக்கம் தெரிவித்தால் குறித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு தான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

சங்கைக்குரிய திவியாகவு யஸஸ்சி நாயக்க தேரர் தலைமை வகிக்கும் புத்தசாசன சபையினால் இந்த பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ லங்கா அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச தேரர், சங்கைக்குரிய திருக்குணாமலே ஆனந்த தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரும் ஏனைய மதத் தலைவர்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment