உலக வங்கி வஸிப் கருத்திட்டத்தின் கீழ் பின்தங்கிய 1000 கிராம மக்களின் குடிநீர் சுகநல பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் - அமைச்சர் ரவூப் ஹக்கீம் - News View

About Us

About Us

Breaking

Thursday, August 29, 2019

உலக வங்கி வஸிப் கருத்திட்டத்தின் கீழ் பின்தங்கிய 1000 கிராம மக்களின் குடிநீர் சுகநல பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் - அமைச்சர் ரவூப் ஹக்கீம்

வஸிப் (WASIPP) எனப்படும் நீர் வழங்கல் மற்றும் சுகநலப் பாதுகாப்புக் கருத்திட்டம் உலக வங்கியின் உதவித் திட்டங்களில் கிரீடம் போன்றதொரு முக்கிய கருத்திட்டமாகும். இதன் மூலம் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் மக்களின் குடிநீர் மற்றும் சுகநலப் பாதுகாப்பு சேவைகள் உறுதிப்படுத்தப்படுவதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற “வஸிப்” கருத்திட்ட செயற்பாடுகளில் அனுபவப் பகிர்வு தொடர்பான தேசிய செயலமர்வை ஆரம்பித்து உரை நிகழ்த்தும் போதே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதனை தெரிவித்தார். 

நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு உலக வங்கியின் உதவித் திட்டத்தின் மூலம் 2015ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட குடிநீர் மற்றும் சுகநலப் பாதுகாப்பு மேம்பாட்டுக் கருத்திட்டம் கேகாலை, பதுளை, நுவரெலியா, கிளிநொச்சி, இரத்தினபுரி, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு முதலான 7 மாவட்டங்களில் 4 இலட்சம் மக்களுக்கு தூய குடிநீரைப் பெற்றுக் கொடுத்துள்ளது. 
தற்போது இந்த வஸிப் கருத்திட்டம் மேலும் 5 நகர நீர் வழங்கல் சுகநலப் பாதுகாப்பு திட்டங்களையும் 106 கிராமிய நீர் வழங்கள் திட்டங்களையும் ஆரம்பித்துள்ளது. மேலும், 210 மீளமைப்புத் திட்டங்களை முன்னெடுத்து வருவதுடன் 18500 பேருக்குசுகநலப் பாதுகாப்பு வசதிகளை இக்கருத்திட்டம் அமுல்படுத்தப்படும் மாவட்டங்களில் முன்னெடுத்துள்ளது. 

455 வலது குறைந்தோருக்கான சுகநலப் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. வேடுவர் சமூகத்தவர்கள் வசிக்கும் தம்பான மற்றும் ரதுகலமுதலான பிரதேசங்களில் 466 மலசலக் கூடங்களை அமைத்து கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

முதலாவது சுற்று முடிவடைந்து இரண்டாம் சுற்றுக்கான வேலைத் திட்டங்கள் வேறு மாவட்டங்களில் முன்னெடுப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கிடைக்கப் பெறும் நிதியுதவியைப் பயன்படுத்தி 1000 கிராமங்களுக்கு நீர் வழங்கும் திட்டங்களை ஆரம்பிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றதாக அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார். 
தொடர்ந்து உரைநிகழ்த்திய அமைச்சர், நாடு முழுவதிலுமுள்ள நீர் பாவனையாளர் அமைப்புகளின் உதவியுடன் சமூக நீர் வழங்கல் திட்டங்களை முன்னெடுப்பதற்காக கடந்த வரவு செலவு திட்டத்தின் மூலம் ஒதுக்கீட்டைப் பெற்றுக் கொண்டோம். இதன் மூலம் சுத்தமான குடிநீரை மக்களுக்குப் பெற்றுக்கொடுப்பதில் பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும். 

மேலும் நீர் வழங்கள் மற்றும் சுகநலப் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச மாநாடுகளில் கூட வஸிப் திட்டத்தின் அமைவுகள் தொடர்பாக நான் கூறிவருகின்றேன். மேலும், வடக்கில் அமுல்படுத்தப்படவுள்ள நீர் வழங்கல் கருத்திட்டத்தின் மூலம் 4 இலட்சம் மக்கள் நன்மையடைவர். 

இதில் இராஜாங்க அமைச்சர் லக்கி ஜயவர்தன, அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.பிரியந்த மாயாதுன்னே,உலக வங்கியின் பிரதிநிதிபிரதி பாமிஸ்ரி, தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் ஜயதிலக ஹேரத் வஸிப் கருத்திட்ட பணிப்பாளர் என்.யூ.கே.ரனதுங்க பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் லால் பெரேராஆகியோரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment