பதற்ற நிலைமைக்கு உட்படுத்திய சட்டத்தரணிக்கு நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடும் எச்சரிக்கை - News View

About Us

About Us

Breaking

Tuesday, July 16, 2019

பதற்ற நிலைமைக்கு உட்படுத்திய சட்டத்தரணிக்கு நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடும் எச்சரிக்கை

திருகோணமலை நீதிமன்ற வளாகத்தை பதற்ற நிலைமைக்கு உட்படுத்திய சட்டத்தரணியொருவருக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருகோணமலை நீதிமன்ற வளாக சிற்றுண்டிச்சாலையில் நேற்று (15) சந்தேகத்திற்கிடமான முறையில் அனுமதியின்றி மேற்சட்டை அணிந்து வந்த நபரொருவர் நீதிமன்ற பெண் உத்தியோகத்தர்களை வீடியோ படம் எடுத்துள்ளார்.

இதன் காரணமாக அப்பகுதிக்கு 15 நிமிடம் அளவில் எந்த ஒரு நீதிமன்ற உத்தியோகத்தர்களும் செல்லவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் நீதிமன்ற சி.சி.டிவி கெமராவில் பதிவானதையடுத்து சற்று நேரம் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சிற்றுண்டிச்சாலை பணிபுரிபவரிடம், தான் ஒரு கணக்காய்வாளர் எனவும் நீதிமன்ற நடவடிக்கைகளை அவதானிக்க வந்ததாகவும் குறித்த சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, இவ்விடயம் தொடர்பில் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து, அவர் உடனடியாக சிற்றுண்டிச்சாலைக்கு சென்று குறித்த நபரை தனது உத்தியோகபூர்வ அறைக்கு அழைத்து சென்றுள்ளார்.

இதேவேளை, திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அவரிடம் பல கேள்விகளை எழுப்பிய போது, தான் ஒரு சட்டத்தரணி என கூறியுள்ளார். அத்துடன் தமது சட்டத்தரணி அடையாள அட்டையினையும் ஒப்படைத்துள்ளார்.

இதனை அடுத்து நீதிபதி பல கோணங்களிலும் அவர் பற்றி விசாரணைகளை மேற்கொண்டதுடன் அவர் ஒரு சட்டத்தரணி என உறுதிப்படுத்தப்பட்டது.

சட்டத்தரணிகளுக்கு உரிய கௌரவமான, சிறந்த முறையில் ஆடைகளை அணிந்து சட்டத்தரணி ஆலோசனை அறையில் அமருமாறு நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் குறித்த நபரை கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளார்.

இந்நிலையில் குறித்தநபர் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் தனக்கு கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தில் நண்பர்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவர் எதற்காக திருகோணமலை வந்தார் என்பது பற்றி எவ்வித தகவலும் கூறவில்லை என தெரியவருகின்றது.

No comments:

Post a Comment