கிரைஸ்ட்சர்சில் நடந்த பயங்கரவாத துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல் பேஸ்புக் சமூகத்தளத்தில் நேரடி ஒளிபரப்புச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பேஸ்புக் நிறுவனம் அதன் நேரடி ஒளிபரப்பு வீடியோவுக்கான விதிமுறைகளைக் கடுமையாக்கவுள்ளது.
இரு பள்ளிவாசல்களில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் 50 பேர் உயிரிழந்தனர்.
அந்தக் கொடூரமான சம்பவத்தைக் காட்டும் வீடியோக்கள் இணையத்தில் பரவிவருவது குறித்து பலர் கேள்வி எழுப்பியதாக பேஸ்புக்கின் தலைமை செயல்பாட்டு அதிகாரி செரில் சான்ட்பேர்க் கூறினார்.
பேஸ்புக் நேரடி சேவைக்கான விதிமுறைகளைக் கடுமையாக்குவதுடன், வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் கருத்துகள் குறித்த பதிவுகள் மீதும் கூடுதல் கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நியூசிலந்து மக்களுக்கு ஆதரவு வழங்குவதும் முக்கிய குறிக்கோள்களில் அடங்கும் என்று சான்ட்பேர்க் கூறினார்.
வன்முறை காட்சிகளைக் கொண்ட வீடியோக்களை விரைவாக அடையாளங்கண்டு அவை பரவுவதைத் தவிர்க்கும் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் பேஸ்புக் முதலீடு செய்யவிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இதற்கு முன் பேஸ்புக்கின் விதிமுறைகளை மீறியவர்கள் பேஸ்புக் நேரடி ஒளிபரப்பு சேவையைப் பயன்படுத்த தடைசெய்வது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment