மதுபோதையில் வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் கே.டி லால்காந்த பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (07) இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
மோசன் ஒன்றின் மூலம் முன்னிலையான அவரை, ரூபா ஒரு இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணைகளில விடுவிக்குமாறு அநுராதபுரம் மேலதிக நீதவான் ஹேமந்த புஷ்பகுமார உத்தரவிட்டார்.
கடந்த மார்ச் 01 ஆம் திகதி பிற்பகல், அநுராதபுரம் - புதிய புத்தளம் வீதியில் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு அருகில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் செலுத்திச் சென்ற வாகனம், எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றிருந்தது.
குறித்த விபத்தில், மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த பெண்ணுக்கும், அவருடன் வந்த சிறுமிக்கும் பிரதிவாதியினால், தலா ரூபா ஒரு இலட்சம் பணம் வழங்கப்பட்டுள்ளதாக, அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.
இவ்விபத்தில் குறித்த பெண்ணும், அவரது உறவினரான 14 வயது சிறுமி ஒருவரும் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில், கே.டி. லால்காந்தவை பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment