பேரம் பேசும் சக்தியை இல்லாமல் ஆக்குவதற்கு திரைமறைவில் சதி நடக்கிறது - அமைச்சர் ஹரீஸ் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 7, 2019

பேரம் பேசும் சக்தியை இல்லாமல் ஆக்குவதற்கு திரைமறைவில் சதி நடக்கிறது - அமைச்சர் ஹரீஸ்

எம்.சீ.அன்சார், றியாத் ஏ. மஜீத்
இன்றைய காலகட்டமானது 1978ஆண்டு தொடக்கம் 2019 வரை இந்நாட்டு முஸ்லிம்கள் ஆனுபவித்து வருகின்ற அரசியல் உரிமைகளை தலைகீழாகப் புரட்டிப் போடுகின்ற காலமாக இந்த வருடம் மாறப்போகுகின்றது.

அடுத்த சில மாதங்களில் நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு எது மிஞ்சப்போகின்றது. என்ற அச்சம் இன்று முஸ்லிம்களுக்கு மத்தியில் எழுந்திருக்கின்றது. என உள்ளுராட்சி மாகாண சபைகள் இராஜாங்க அமைச்சரும், முஸ்லிம் கல்வி, சமூக ஆய்வுகள் நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

முஸ்லிம் கல்வி, சமூக ஆய்வுகள் நிறுவனத்தின் (மெஸ்ரோ அமைப்பு) ஏற்பாட்டில் சம்மாந்துறைத் தொகுதி இளைஞர்களுக்கான “வலிமையான சமூகத்திற்கு ஆளுமையான இளைஞர்கள்” எனும் தொனிப்பொருளில் சமூக மாற்றத்திற்கான தலைமைத்துவத்துவச் செயலமர்வு திங்கட்கிழமை (04) சம்மாந்துறை அப்துல் மஜீத் நகர மண்டபவத்தில் முஸ்லிம் கல்வி, சமூக ஆய்வுகள் நிறுவனத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணியும் பதில் நீதவானுமான ஏ.எம்.நஸீல் தலைமையில் இடம்பெற்றது. 

அதில் “இலங்கையின் சமகால அரசியலும், முஸ்லிம் இளைஞர்களின் வகிபாகமும்” எனும் தலைப்பில் வளவாளராக கலந்து கொண்டு அவர் கருத்துரை வழங்கியபோதே இவ்வாறு தெரிவித்தார்.
நாங்கள் இதுவரை காலமும் பெருந்தலைவர் அஷ்ரப் அவர்கள் விட்டு வைத்திருந்த வித்துக்களிலிருந்து எங்களுடைய சமூகத்தை ஏதோ ஒரு அடிப்படையில் கரைசேர்த்து வந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் எதிர்காலத்தில் நாட்டில் எமது இளைஞர்கள் எதிர்கால தலைவர்கள் என்ற அங்கீகாரத்தை தருமா என்ற ஒரு வினா தற்போது எழுந்திருக்கின்றது.

1978ற்குப் பின்னர் வந்த இன முரண்பாடு என்பது நாட்டில் பெரும்பான்மை சமூகத்திலிருந்து சிறுபான்மை சமூகத்தை பலரூபங்களில் இடைவெளிகளை கூட்டியிருந்த காலகட்டமாகயிருந்தது. அது குறிப்பாக எங்களுடைய தமிழ் சமூகம் தங்களின் இருப்புக்காகவும், உரிமைகளுக்காகவும் ஆயுதப் போராட்டத்தினை ஆரம்பித்தபோது அது பலகோலங்களில் வட கிழக்கு மண்ணில் இரத்த ஆற்றினை ஓடச்செய்ததுடன், தமிழ் சமூகத்தின் அரசியல் விடுதலைதான், உரிமைதான் எங்களுக்குத்தேவை வேறு எதுவும் தேலையில்லை என அவர்களுடைய போராட்டம் விரீயம் எடுத்திருந்தது. அதன் விளைவு வட கிழக்கிலுள்ள பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தினார்கள்.

அந்த ஆயுதம் ஏந்துதல் தெற்கில் உள்ள அரசியல் தலைமைகள் ஜனாதிபதி தொடக்கம் பாராளுமன்றம் வரை உலுக்கி எடுத்திருந்தது. இதனால் சர்வதேசம் வந்தது. இந்திய அமைதிகாக்கும் படை வந்தது. இறுதியில் அது இலங்கை இந்திய ஒப்பந்தமாக மாறியது. ஆனால் துரதிஷ்டவசம் 1982 வரை இந்நாட்டு முஸ்லிம்களுக்கு தலைமை தாங்குவதற்கு தலைமையொன்று இருக்கவில்லை சர்வதேசத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கு தலைமையொன்று இருக்கவில்லை. அதன் விளைவு 1987ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக வடக்கும், கிழக்கும் இரவோடு இரவாக சொந்த மண்ணிலே முஸ்லிம்கள் அடிமைப்பட்டிருந்தனர். ஈட்டிற்றில் வடக்கிலிருந்த முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டனர். முஸ்லிம் சொல்லொன்னாத துரங்களை அனுபவத்திருந்தனர்.
இந்நாட்டு முஸ் லிம் சமூகம் கருத்தில் கொள்ளப்படாமை உள்ளிட்ட பல காரணிகள் முஸ்லிம்களின் அரசியல் தனித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டியதன் தேவையை வலியுறுத்தி நின்றன. இவ்வாறான சூழலில் ஆயுதம் தூக்கிய முஸ்லிம் இளைஞர்களை, அந்தக் கலாசாரத்திலிருந்து மீட்டெடுத்து, அவர்களுக்கு ஓர் அரசியல் தலைமைத்துவத்தினை வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கத்தினை பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் ஆரம்பித்தார்.

இந்த பேரியக்கத்தின் மூலம் முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால சிற்பிகளாக இளைஞர்கள் சிந்தித்து அதற்காக அதற்காக முஸ்லிம் காங்கிரஸ் எனும் இயக்கத்தை உருவாக்கி முஸ்லிம் இளைஞர்களை ஆயுதக் கலாசாரத்திக்குள் காலடிவைப்பதை தடுத்தார். என்பதனை இன்றைய இளைஞர்கள் மறந்துவிடக்கூடாது.

அஷ்ரப் அவர்கள் மரணிப்பதற்கு முன்பு, இந்த இயக்கத்தின் மூலம் ஆட்சியாளர்களை தீர்மானிக்கின்ற அத்தியாயத்தினை நாட்டில் உருவாக்கினார். அந்த அத்தியாயம் இந்த நிமிடம் வரை மீண்டும் நிருபிக்கப்பட்டிருக்கின்றதுடன், இன்று நாட்டின் முஸ்லிம் என்பது நாட்டின் ஆட்சியினை தீர்மானிக்கின்ற வலுவாக மாறியிருக்கின்றது.

முஸ்லிம் சமூகத்தினர் தீர்மானிக்கின்ற சக்தியினை நாட்டிலிருந்து ஒழிக்க வேண்டும். என்பதற்காக தமிழ் தலைமைகள் தற்போது புதிய அரசியலமைப்பு என்ற விடயத்தினை முன்னெடுத்துள்ளார். இதனை இந்த ஆட்சியாளர்கள் தூக்கிப் பிடித்திருக்கின்றார்.
எங்களுக்குள் இருக்கின்ற மிகப்பெரிய சவால் அரசியலமைப்பினை உருவாக்க தேவையாகயிருக்கின்ற தமிழ்தலைமைகளும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் கோரி நிற்கின்ற விடயம் சமஷ்டி அரசியலமைப்பும், அதிகாரப் பரவலாக்கமுமாகும். இதனால் எமது சமூகம் எந்தளது பயனடையப் போகின்றது என்பதை சிந்திக்க வேண்டும்.

நாட்டில் அன்மையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள அவதாரம் எங்களுக்கு பெரும் அச்சத்தினை தோற்றுவித்துள்ளது. தேசிய அரசாங்கத்திலிருந்து சுதந்திரக்கட்சியினர் வெளியேறிய பின்பு தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கியதால் இன்று பிரதமரும், அமைச்சரவையும் அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கையினை நிறைவேற்ற வேண்டும் என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தற்போது ஆட்சியில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் எதை பிடுங்க முடியுமோ அவற்றிலில் மிக கவனமாக இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

நாட்டில் தனிநபர்களின் அரசியலை தீர்மானிப்பதற்காக மீண்டும் ஒரு அரசியலமைப்பினை கொண்டு வந்து ஜனாதிபதி முறையை ஒழித்து பிரதமர் ஆட்சியை ஏற்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய அரசியலில் மூன்று துருவங்களாகவுள்ளவர் ஓர் நேர்கோட்டில் இன்று வந்துள்ளனர். அதற்கு நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் 20வது திருத்தச்சட்டம் மூலம் மக்கள் விடுதலை முன்னணியினர் களம் அமைத்துக் கொடுத்துள்ளனர்.
கடந்த 45 வருடகாலமாக அனுபவித்து வந்த பேரம்பேசும் சக்தியை இல்லாமல் ஆக்குவற்கு திரைமறைவில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனவே, எமது சமூகத்தின் உரிமைகளை எந்த விட்டுக்கொடுப்புகளுக்கும் இல்லாமல் பாதுகாக்க வேண்டும். அதற்கு இளைஞர்கள் எமது அரசியற் தலைமைகளுக்கு ஆளுத்தம் கொடுக்கவும், மக்களை விழிப்படையச் செய்யவும் வேண்டும். என்றார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக அரசியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.எம்.பாஸில், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ரவூப் செய்ன், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா, மனநல வைத்தியர் சராப்தீன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.

சம்மாந்துறை, இறக்காமம், வரிப்பத்தான்சேனை, மத்தியமுகாம், வங்காமம், மாவடிப்பள்ளி, மாளிகைக்காடு மற்றும் சவளக்கடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 1000ற்கும் மேற்பட்ட இளைஞர்கள், முஸ்லிம் கல்வி, சமூக ஆய்வுகள் நிறுவனத்தின் செயலாளர் எம்.சுல்பி, நிறுவனத்தின் உயர்பீட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட அனைத்து இளைஞர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment